எங்களுக்கு தனுஷ் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும்: கதிரேசன் – மீனாட்சி தம்பதியர்

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த எம்.மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் -மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் தான் என்றும், வயதாகி விட்ட எங்களுக்கு அவர் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்றும் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

தனுஷின் அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட விவகாரத்தில், நடிகர் தனுஷ் எங்கள் மகன்தான் என்று நிரூபித்தாலே போதும் என்று மேலூர் தம்பதி கதிரேசன், மீனாட்சி தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த வழக்கில் உண்மை இல்லை. எனவே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதில் மனு தாக்கல் செய்த கதிரேசன் நடிகர் தனுஷ் எனது மகன்தான் என்று நிரூபிக்க போதிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என்று கூறி இருந்தார்.

மேலும் எனது மகன் கலைச்செல்வன் தான் தற்போது தனுஷ் என்று பெயரை மாற்றி சினிமாவில் நடித்து வருகிறார் என்றும் அவனது பள்ளிச்சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஐகோர்ட்டில் கதிரேசன் தாக்கல் செய்தார்.

இதனிடையே தனுஷ் தரப்பிலும் பள்ளிச்சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த சான்றிதழில் அங்க அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை. எனவே நடிகர் தனுஷ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த மாதம் 28-ந்தேதி மதுரை ஐகோர்ட்டில் நடிகர் தனுஷ் ஆஜரானார். அப்போது அவரது அங்க அடையாளங்களை மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் வைரமுத்துராஜா தலைமையிலான குழுவினர் சரி பார்த்தனர்.

இதுதொடர்பான விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை வருகிற 27-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டார்.

டாக்டர்கள் தாக்கல் செய்த அறிக்கையில், நடிகர் தனுசின் அங்க அடையாளங்கள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டன. வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது போல அங்க அடையாளங்கள் உள்ளனவா? என்றும் இந்த அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளனவா? என்றும் சோதித்தோம்.

ஆனால் சிறிய அளவிலான மச்சம் லேசர் சிகிச்சை மூலம் எந்த தடயமும் இல்லாமல் அழிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை மதுரை ஐகோர்ட்டு கிளை முழுமையாக ஆய்வு செய்து விரைவில் உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கதிரேசன் – மீனாட்சி தம்பதியர் கூறியதாவது:-

நாங்கள் பணம் காசுக்கு ஆசைப்பட்டு இந்த வழக்கை தொடரவில்லை. நடிகர் தனுஷ் எங்கள் மகன்தான். 16 வயதில் வீட்டை விட்டு வெளியே சென்ற எங்கள் மகன் கலைச்செல்வன், சினிமாவில் தனுஷ் என்ற பெயரில் நடித்து புகழ் பெற்று இருக்கலாம். ஆனாலும் அவன் எனது தாய்-தந்தை இவர்கள் தான் என்று நீதிமன்றத்தில் சொன்னாலே போதும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]