நடிகர் அமீர்கானுக்கு பன்றி காய்ச்சல்….

இந்தி முன்னணி நடிகர் அமீர்கான் ‘பானி’ என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதன் பரிசளிப்பு விழா நேற்று மாலை புனேயில் நடைபெற்றது. இதில், நடிகர் அமீர்கான் தனது மனைவி கிரண் ராவுடன் பங்கேற்க திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால், டாக்டர்கள் வீட்டுக்கு வந்து சிகிச்சை அளித்தனர். இருவரது ரத்த மாதிரிகளையும் ஆய்வு செய்ததில், இருவருக்கும் பன்றி காய்ச்சலின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.


இதனால், புனே பரிசளிப்பு விழாவில் பங்கேற்பதை அமீர்கான் ரத்து செய்தார். இருப்பினும், வீடியோ கான்பரன்சிங் வாயிலாக அங்கு கூடியிருந்தவர்கள் முன்னிலையில் அவர் பேசினார். அப்போது, தானும், தன்னுடைய மனைவியும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினார்.

தற்போது அமீர்கானும், அவரது மனைவியும் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒருவாரத்துக்கு அமீர்கான் எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்க மாட்டார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

புனேயில் நடைபெற்ற பானி தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் அமீர்கான் கலந்து கொள்ள முடியாததால், அவருக்கு பதிலாக நடிகர் ஷாருக்கான் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

52 வயதான நடிகர் அமீர்கான் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.