த.தே.கூட்டமைப்பு அமைச்சர்கள் அதிகமாக வேலை செய்யவில்லை என்ற பிரசாரம் உண்மைக்கு மாறான ஒரு பிரசாரம்!!

கிழக்கு மாகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சர்கள் அதிகமாக வேலை செய்யவில்லை என்கின்ற பிரசாரமொன்று இந்தத் தேர்தல் காலத்தில் இருந்தது. அது உண்மைக்கு மாறான ஒரு பிரசாரம். உண்மையில் கிழக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பணம் எமது அந்த இரண்டரை வருட ஆட்சிக் காலத்தில் தான் முழுமையாக மக்களுக்காகச் செலவிடப்பட்டிருக்கின்றது இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முன்னாள் விவசாய, மீன்பிடி அமைச்சர் அவர்களின் 2017ம் ஆண்டுக்குரிய பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் முறகொட்டான்சேனை பிரதேச நன்னீர் மீன்பிடிச் சங்கங்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு வெள்ளகிக்கிழமை (30) நடைபெற்றது இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – “மாகாண அமைச்சு மத்திய அரசு போல அதிக நிதிவளம் கொண்ட அமைச்சு அல்ல. இருந்தபொழுதிலும் மாகாணத்திற்கென்று ஒதுக்கப்படுகின்ற மட்டுப்படுத்தப்பட்ட நிதியையும், அதைவிட மத்திய அரசில் மீன்பிடி அமைச்சில் இருந்து பெறக்கூடிய அநுகூலங்களையும் பெற்று எங்களுடைய மீன்பிடிச் சங்கங்களை வளப்படுத்துகின்ற அந்த நிகழ்வுகளில் செயற்பட்டு வந்தோம்.

இதன் மூலம் மீனவர் தங்குமிடங்கள் அமைத்தல், வலைகள், தோணிகள் வழங்குதல், அதே நேரத்தில் மின்குஞ்சு வளர்ப்பதற்கான செயற்திட்டங்கள், அதே போன்று கடுக்காமுனையிலே மின்குஞ்சு உற்பத்தி நிலையம் ஒன்றை எமது அமைச்சினால் செய்தோம். அதுவரையில் இக்னியாகலையில் இருந்துதான் மின்குஞ்சு பெற வேண்டிய நிலைமை இருந்தது. ஆனால் எங்களுடைய பிரதேசத்திலே அது வேண்டும் என்பதற்காகப் பல பிரயத்தனங்களுக்கு மத்தியில் அந்த நிலையத்தினை எமது காலத்தில் உருவாக்கினோம்.

கிழக்கு மாகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சர்கள் அதிகமாக வேலை செய்யவில்லை என்கின்ற பிரசாரமொன்று இந்தத் தேர்தல் காலத்தில் இருந்தது. சர்வதேச அரசதுறை சாராத நிறுவனங்களிடம் இருந்து பல உதவிகளைப் பெற்று எமது மக்களுக்கான சேவையை வழங்கியிருக்கின்றோம். அதற்கு ஒரு உதாரணமாக கரடியனாற்றில் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்ட விவசாயப் பயிற்சிக் கல்லூரியைச் சொல்லாம். சுமார் 127 மில்லியன் ரூபா செலவில் அதனை நாங்கள் அமைத்தோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஜனாதிபதியை அழைத்து திறந்து வைத்த ஒரு வரலாற்று நிகழ்வாக அது இருந்தது. எமது எதிர்க்கட்சித் தலைவர் ஐயா சம்பந்தன் அவர்கள் அதற்கு அடிக்கல் நாட்டினார் மிகக் குறுகிய காலத்திலே நாங்கள் விரைவாகச் செயற்பட்டு மிக வேகமாக அதனைப் பூர்த்தி செய்தோம்.

தற்போது மக்களினுடைய ஆட்சி கிழக்கு மாகாணத்தில் இல்லை. ஆளுநருடைய ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மாகாண ஆட்சி முடிவுற்றதும் அடுத்த தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் நாட்டினுடைய பல்வேறு அரசியல் நிகழ்ச்சி நிரல் காரணமாக உடனடியாக மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்பட்டது.

இந்த மாகாணத்தின் ஆட்சிக் காலம் முடிவடைய முன்னர் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் அரசாங்கத்திற்கு இருந்தமையால் மாகாண சபை ஆட்சிக் காலத்தை நீடிப்பதற்காக 20வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஐந்து வருடங்கள் என்கின்ற மக்கள் ஆணையை விடுத்து இந்த நீடிப்பை நாங்கள் ஏற்றுக் கொள்வதா என்ற கேள்வி எங்களுக்குள் இருந்தது.

அந்த நேரத்தில் எங்களால் விடை காணப்பட்ட விடயம் என்னவென்றால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் ஆளப்படுகின்ற இந்த மாணசபையை, 37 உறுப்பினர்கள் மூலம் மக்கள் தங்கள் செயற்பாடுகளை மேற்கொள்கின்ற இந்த மாகாணசபையை ஒரு அதிகாரியான ஆளுநருக்கு விட்டுக் கொடுப்பதா? அல்லது மக்கள் ஆணையை மக்கள் பிரதிநிதிகளிடம் தக்க வைத்துக் கொள்வதா என்ற கேள்வி எழுந்த போது விதிவிலக்கான ஒரு சந்தர்ப்பமாக ஜனநாயகத்திலே ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒரு விடயம் என்ற அடிப்படையிலே 20வது திருத்தச் சட்டததை நாங்கள் ஆதரித்தோம். ஆனால் அது மக்கள் தீர்ப்புக்குச் செல்ல வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக அதனை அரசு கைவிட வேண்டி ஏற்பட்டது. உண்மையில் அந்த தீர்ப்பு சம்மந்தமாக கல்வி சார்ந்த பல விமர்சனங்கள் இருக்கின்றன.

முன்பெல்லாம் நாங்கள் வெளிப்படையாக வேலை செய்ய முடியாத நிலைமை இருந்தது. ஆட்சியாளர்களினுடைய கைப் பொம்மைகளாக இருந்தவர்கள் தான் ஆட்சி செய்தார்கள். 2015ற்குப் பிறகுதான் மக்கள் சுதந்திரமாகக் கதைக்கக்கூடியதாக இருக்கின்றது. மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு மாத்திரம் தான் விமர்சனங்களை மேற்கொள்ள முடியும் முன்பு இருந்தவர்களுக்கு இவ்வாறு விமர்சனம் செய்தால் ஏற்படும் விளைவுகள் என்ன என்று மக்கள் அறிவார்கள். அந்தளவுக்கு ஒரு சுதந்திரமான நிலைமையில் நாங்கள் இருக்கின்றோம் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]