தேர்தல் கால வாக்குறுதிகள் குறைவின்றி நிறைவேற்றப்படும் – நஸீர் அஹமட் தெரிவிப்பு!!

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் காலத்தில் நாம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏறாவூர் நகரசபைத் தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டதின் பின்னர் அபிவிருத்தி செய்ய உத்தேசித்துள்ள உள்ளுர் பகுதிகளுக்கு அவர் ஞாயிற்றுக்கிழமை 08.04.2018 திடீர் விஜயம் மேற்கொண்டு அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்துப் பார்வையிட்டார்.

அவர் தொடர்நது உரையாற்றுகையில் – கடந்த கால அரசியல் ஒட்டு மொத்தமான சமூகத்தையும் ஏமாற்றி ஒரு சிலர் வயிறு வளர்ப்பதாகவே இருந்து வந்துள்ளது. நகருக்குள் சேரும் குப்பைக் கழிவுகளைக் கூட இந்த கையாலாகத்தன அரசியல்வாதிகளால் அகற்ற முடிந்திருக்கவில்லை.

ஊருக்குள் சேரும் குப்பைகளை சேகரித்து ஊருக்குள்ளேயே கொட்டும் துரதிருஸ்டம் இருந்து வந்துள்ளது. இதனை நான் கிழக்கு மாகாண முதலமைச்சராக வந்த ஒரு சில குறுகிய காலங்களுக்குள்ளாகவே மாற்றியமைத்தேன்.

திண்மக் கழிவு முகாமைத்துவம், மற்றும் கழிவு நீர் முகாமைத்துவத்திட்டத்திற்காக சுமார் 1350 கோடி ரூபாய் செலவிலமைந்த விஞ்ஞான பூர்வ செயற் திட்டத்தின் ஆய்வு அறிக்கையை பிரதம மந்திரியிடம் கையளித்துள்ளேன்.

அது தற்போது அங்கீகரிக்கப்பட்டு சீன அரசாங்கத்தின் உதவியுடன் அமுலாக்கப்படவுள்ளது.இத்திட்டம் அமுலாக்கப்பட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தின் தன்னாமுனையிலிருந்து சித்தாண்டி வரையுள்ள பல்லாயிரக்கணக்கான தமிழ் முஸ்லிம் மக்கள் வருடா வருடம் எதிர் நோக்கும் வெள்ள நீர், கழிவு நீர், மற்றும் சாக்கடை நீர்ப் பிரச்சினை எதிர்கொள்ளும் சிரமங்கள் முற்றாகவே நீங்கி விடும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர சந்தை கேந்திர இட முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இது இப்பிரதேசத்திலுள்ளவர்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த மட்டக்களப்பு மாவட்டத்தின் மைப் புள்ளியாகவும் சகல இன மக்களும் மலிவு விலையில் பொருள் கொள்வனவு செய்யும் இடமாகவும் காலாகாலமாக இருந்து வந்துள்ளது.

இந்த சந்தை சுமார் 350 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. வெகு விரைவில் சந்தை பூர்த்தி செய்யப்பட்டு பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்படும்.
அதேபோல மட்டக்களப்பு வாவியையும் அதனைச் சூழவுள்ள சதுப்பு நிலப் பிரதேசங்களையும் இயற்கை மாறாமல் பேணுவதற்காகவும் பல திட்ட முன் மொழிவுகளைச் செய்துள்ளோம். இப்பிரதேசத்தின் வளங்களை நாசம் பண்ணாமல் அதன் மூலம் உச்சப் பயனைப் பெற திட்டம் வகுத்துள்ளோம்.

இப்பிரதேசத்தின் மீன் பிடி வளம் எதுவித திட்டமுமில்லாமல் வீணாகிறது.
இதுபோன்று எத்தனையோ தொழில்துறை சார்ந்த மக்களுக்கு நன்மை தரும் எத்தனையோ பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களைத் தீட்டியுள்ளோம். அதன் பலாபலன்கள் சிலவற்றை இப்பொழுது பிரதேச மக்கள் ஆரம்பிக்கத் துவங்கியிருக்கின்றார்கள்.

எதிர்வரும் காலங்களில் இந்தப் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் வெற்றியளிக்கும்போது மக்கள் முன்னேறுவார்கள். மக்கள் தமக்குச் சேவை செய்யக் கூடிய ஆற்றலுள்ளவர்களை தெரிவு செய்துள்ள வேண்டும்.”என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]