தேர்தல் கால மௌன நேரத்தைக் குழப்ப வேண்டாம் என எச்சரிக்கை

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரசாரங்களுக்கான கால எல்லை புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து தேர்தல் இடம்பெறும் வரையிலான அடுத்த 48 மணித்தியால மௌன நேரத்தைக் குழப்பும் எந்த நடவடிக்கையும் கடுமையாகக் கையாளப்படுமென பொலிஸ் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின் பிரகாரம் குறித்த அடுத்து வரும் 48 மணி நேரத்திலும் எந்த விதமான தேர்தல் பிரசாரங்களோ தேர்தலைக் குழப்பும் நடவடிக்கைகளோ இடம்பெறக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நிலைமை கடுமையாகக் கண்காணிக்கப்படுவதோடு சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதேசங்களுக்குப் பொறுப்பான பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தக் காலப்பகுதியில் அரசியல் கட்சிகளோ சுயேச்சைக் குழுக்களோ ஆதரவு தேடும் எந்த விதமான தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுபட முடியாதென்பதுடன் வேட்பாளர்களின் வீடுகளிலோ, காரியாலயங்களிலோ தமது கட்சி அல்லது சுயேச்சைக் குழுக்கள் சார்ந்த கட் அவுட்களை காட்சிப்படுத்த முடியாது என்பதும் எச்சரித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் கால சட்ட ஒழுங்கு மீறல்களையும் துஷ்பிரயோகங்களையும் தீவிரமாகக் கண்காணிப்பதற்காக வழமையான கண்காணிப்புக்கு மேலதிகமாக விஷேட இரவு பகல் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளிலும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதேசங்களுக்குப் பொறுப்பான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]