தேர்தலுக்கு முன்னர் விவாதத்தை நடத்த முடியுமா?

உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர், ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முடியுமா என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்துள்ளார்.

பாணந்துறையில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றியபோது அவர் இதனைக் கூறியுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி குறித்து விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையையும், முன்னைய ஆட்சிக்கால மோசடிகள் குறித்து விசாரித்த ஆணைக்குழு அறிக்கையையும், பெப்ரவரி மாதம் 20ஆம், 21ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்தே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அறிக்கைகள் தொடர்பாக உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர் விவாதம் நடத்த தயாரா என்று கூட்டு எதிரணி மற்றும் ஐதேகவிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

“இந்த அறிக்கைகளைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று கோரியவர்கள், அது வெளிப்படுத்தப்பட்ட பின்னரும், விவாதத்தை நடத்த இழுத்தடிக்கின்றனர்.முக்கிய பிரமுகர்களாக உள்ள திருடர்கள் தேர்தலுக்கு முன்னர் விவாதத்தை நடத்தாமல் தடுத்துள்ளனர்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.