தேர்தலுக்கு பின்னர் புதிய பிரதமர் – டிலான்

டிலான்

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேற்றும் என்று இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் இதுகுறித்து கூறுகையில், “தற்போதைய சூழ்நிலையில், உள்ளுராட்சி தேர்தல் முடிந்த பின்னர், ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பதிலாக புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.

ஐதேகவுக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டால், இந்த நகர்வு சாத்தியமாகும். ஐதேகவுக்கு பெரும்பான்மையான இடங்களில் வெற்றி கிடைத்தால், இந்த நோக்கம் சாத்தியப்படாது.

எனவே, வாக்காளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே வாக்களிக்க வேண்டும். அப்படி வாக்களித்தால் தான், புதிய பிரதமரை ஜனாதிபதியால் நியமிக்க முடியும்.

உள்ளூராட்சித் தேர்தல் முடிந்த பின்னர், இந்த கூட்டு அரசாங்கத்தில் இணைந்திருப்பதா இல்லையா என்பதை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு முடிவு செய்யும்.

ஆனால், ஜனாதிபதி நிச்சயமாக, பொருளாதாரத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வார். அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையைப் பறிப்பதற்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் இடமளிக்காது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]