தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே நோக்கில் கவர்ச்சிக்காக வன்முறைகளையும் வெறுப்புணர்வுகளையும் தூண்ட வேண்டாம் அஷ்ஷெய்ஹ் எம்.எல். அப்துல் வாஜித்

அஷ்ஷெய்ஹ் எம்.எல். அப்துல் வாஜித்

தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே நோக்கில் கவர்ச்சிக்காக வன்முறைகளையும் வெறுப்புணர்வுகளையும் தூண்ட வேண்டாம் என தமது அமைப்பு வேட்பாளர்களிடம் உருக்கமான வேண்டுகோளை விடுப்பதாக ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவரும் கல்வியியற் கல்லூரி விரிவுரையாளருமான அஷ்ஷெய்ஹ் எம்.எல். அப்துல் வாஜித் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏறாவூர் நகரசபை மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை என்பனவற்றின் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் எறாவூர் ஜாமிஉல் அக்பர் ஜும்மாப் பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை 17.12.2017 மேற்படி சம்மேளனம் மற்றும் ஏறாவூர் ஜம்மிய்யத்துல் உலமா சபை ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் இடம்பெற்றது.

அதில், “அபேட்சகர்களுக்கு அழகிய முன்மாதிரியான வழிகாட்டல்” எனும் தொனிப்பொருளில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அப்துல் வாஜித்@
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இஸ்லாம் மார்க்கம் காட்டித் தந்த அழகிய முன்மாதிரிப் பண்புகளோடு அபேட்சகர்கள் நடந்து கொள்வதை மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

தேர்தல் கால பிரச்சாரத்தின்போது எதிர்த் தரப்பு அபேட்சகர்களை எவ்வாறேனும் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக வீண் விரயம் செய்தல், பொய், புறம், அபாண்டம், இட்டுக் கட்டுதல், சமூகக் குழப்பங்களை ஏற்படுத்துதல், சக சமூகத்தாரிடையே இன விரோத செயற்பாடுகளைத் தூண்டுதல் என்பனவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மாறாக இத்தகைய இழிநிலை அரசியல் முன்னெடுப்புக்களுக்குப் பதிலாக ஏனைய அபேட்சகர்களையும், வாக்காளர்களையும் கண்ணிமாக மதித்து தங்களால் மக்களுக்கும் பிரதேசத்திற்கும் ஆற்றப்பட உத்தேசித்துள்ள சேவைகளைப் பற்றிய ஆக்கபூர்வமான விடயங்களை அபேட்சகர்கள் முன் வைக்க வேண்டும் என்ற அபார எதிர்பார்ப்பு மக்களிடத்திலும் பொது நல நிறுவனங்களிடமும் தேர்தல் திணைக்களத்திடமும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொலிஸாரிடமும் உள்ளன.

எனவே, கனவான் அரசியல்வாதிகளாகவும். ஜனநாயகத்தை மதிக்கும் முன்மாதிரி அரசியல்வாதிகளாகவும் புதிய உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்கள் நடந்து கொள்வது காலத் தேவையாக இருக்கும். ஐரோப்பிய மற்றும் மேற்கு நாடுகளில் சகல வேட்பாளர்களும் ஒரே மேடையில் அமர்ந்து தங்களது சிந்தனைத் திறன்களை அறிவாற்றலோடு உரசிப் பார்க்கின்ற கள நிலைமை நாகரீகமானது. உண்மையில் அதனை நாம்தான் உலகுக்கு அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும், ஆனால், தரதிருஷ்ட வசமாக அந்தப் பண்புகள் நம்மை விட்டு நீங்கியிருப்பது வருத்தமளிக்கின்றது” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]