தேர்தலில் களமிறங்கவுள்ள முதலமைச்சர் விக்கி- வேட்பாளர்கள் தெரிவும் முடிந்தது?

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் வடக்கில் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான அணியும் களமிறங்கவுள்ளது. வடக்கின் ஐந்து மாவட்டங்களிற்குமான வேட்பாளர் தெரிவில் முதலமைச்சர் அணி நேற்றிலிருந்து தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றம் கடந்த 9ம் திகதி திடீரென கலைக்கப்பட்டது. நாடாளுமன்றம் கலைக்கப்படுவது குறித்த வர்த்த மானியில், அடுத்த தேர்தல் ஜனவரி 5ம் திகதி இடம்பெறுமென்றும், வேட்புமனு தாக்கல்கள் இம்மாதம் 19ம் திகதியில் இருந்து 26ம் திகதி வரை இடம்பெறுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலிற்கு எதிராக நாளை உயர்நீதிமன்றத்தில் பல ஐ.தே.க, ஜே.வி.பி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் சில தனிநபர்கள் வழக்கு தாக்கல் செய்யவுள்ளனர்.

இந்த வழக்கு முடிவு எப்படியிருக்குமென்பது தெரியாத நிலையில், தேர்தலிற்கான தயார்படுத்தலில் எல்லா கட்சிகளும் இறங்கி விட்டன.

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான அணியும் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்க தயார்படுத்தலில் இறங்கியுள்ளது. நேற்றிலிருந்து இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

யாழ் மாவட்டத்தில் விக்னேஸ்வரன் அணி சார்பில் நான்கு முக்கிய வேட்பாளர்களை களமிறக்கவுள்ளனர். சுரேஷ் பிரேமச்சந்திரன், அருந்தவபாலன், அனந்தி சசிதரன், ஐங்கரநேசன் ஆகியோர் களமிறங்குவதென நேற்றிரவு முதற்கட்டமாக முடிவாகியுள்ளது. இந்த பட்டியலில் புதிதாக யார் எல்லாம் இணைவார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.

அதுபோல, வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஈ.பி.ஆர்.எல்.எவ் பதிவுசெய்யப்பட்ட கட்சியாக இருந்தாலும், அந்த கட்சி சின்னத்தில் விக்னேஸ்வரன் அணி களமிறங்கவில்லை. இம்முறை சுயேட்சையாகவே களமிறங்கவுள்ளனர்.

விக்னேஸ்வரன் இம்முறை தேர்தலில் களமிறங்கவில்லை. எனினும், அவரும் களமிறங்க வேண்டுமென அவரது அணிக்குள் அபிப்பிராயம் இருந்து வருகிறது. இது குறித்த இறுதி முடிவு வெளியாக இன்னும் சில காலம் நாட்களாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, விக்னேஸ்வரன் அணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்பன தமிழ் தேசிய வாக்காளர்களை குறிவைத்து போட்டியிடவுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]