தேரர்கள் மீது பொலிஸார் முன்னெடுத்த தாக்குதலுக்கு கவலை தெரிவித்த ஜனாதிபதி

தேரர்கள் மீது பொலிஸார் முன்னெடுத்த கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரகைப் பிரயோகத்துக்கு கவலை வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்கான உத்தரவை வழங்கியவர்கள் மீது விசாரணை நடத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 ஆண்டுகள் விதிக்கப்பட்ட பொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை பொதுமன்னிப்பில் விடுவிக்கக் கோரி அந்த அமைப்பின் பிக்குகள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டனர். இதனையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிங்களயே அபி தேசிய அமைப்பு உள்ளிட்ட மேலும் சில அமைப்புக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தேரர்கள் உள்ளிட்ட குழுவினர் இன்று (19) முற்பகல் அறிக்கையொன்றை கையளிப்பதற்காக ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தந்திருந்த வேளையில் அவர்களின் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட காரணத்தினால் ஏற்பட்ட அசௌகரியங்கள் குறித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனிப்பட்ட முறையில் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

தேரர்கள் இன்றைய தினம் ஜனாதிபதியைச் சந்திக்க வருகை தருவதாக அறிவித்திருக்கவில்லை என்பதுடன், கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்வதற்கு ஆலோசனை வழங்கியவர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தேரர்கள் உள்ளிட்ட தரப்பினரை சந்தித்து சுமூகமான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்ட ஜனாதிபதி, தேரர்களினால் கலபொட அத்தே ஞானசார தேரரின் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் முன்வைத்த கோரிக்கை அடங்கிய கடிதத்தையும் பெற்றுக்கொண்டார் – என்றுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]