தேரரின் உடல் தகனத்துக்கு யாழில் எதிர்ப்பு

தேரரின் உடல் தகனத்துக்கு யாழில் எதிர்ப்பு

யாழ். நாக விகாரை விகாராதிபதியின் உடலை தகனம் செய்வது தொடர்பில் பொதுமக்களால் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

யாழ். முற்றவெளி பகுதியில் அமைந்துள்ள தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிக்கு அருகில் விகாராதிபதியின் உடலை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இதற்கு அங்குள்ள மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அருகில் இந்து கடவுளின் ஆலயம் ஒன்று உள்ளதுடன், இவ்வாறன பொது இடத்தில் தகனம் செய்வது அங்குள்ள ஏனைய மக்களின் மனதை புண்படுத்தும் செயல் என்றும் அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்.நாக விகாரை விகாராதிபதி ஞானரத்ன தேரர் சுகவீனம் காரணமாக கொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது உடலம் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டு நாக விகாரையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இறுதி கிரியைகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் முற்றவெளியில் விகாராதிபதியின் உடலை தகனம் செய்வதற்கு யாழ்.மாநகர சபையிடம் அனுமதி கோரப்பட்ட போது , யாழ்.மாநகர சபை அதற்கான அனுமதியினை வழங்கவில்லை.

அதை அடுத்து, தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தூபி அமைந்துள்ள இடத்திற்கும் , யாழ்.கோட்டை பகுதிக்கும் இடைப்பட்ட பகுதி தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்திற்கு சொந்தமான பகுதியில் உடலை தகனம் செய்வதற்கு தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்திடம் அனுமதி பெறப்பட்டு அப்பகுதியில் உடலை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]