தேயிலை, மிளகை இறக்கி ஏற்ற தடை

இலங்கையில் இருந்து தேயிலை மற்றும் மிளகு ஆகியனவற்றை மீள் ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று நடந்த தேர்தல் பரப்புரையில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “தரம்குறைந்த தேயிலை, மிளகு போன்றவற்றை இறக்குமதி செய்து, உள்ளூர் உற்பத்திகளுடன் கலந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகளின் பணம் பறிபோகிறது. அத்துடன் நாட்டின் புகழுக்கும் களங்கம் ஏற்படுகிறது.

இதனால் இறக்குமதி செய்யப்படும் தேயிலை, மிளகு என்பனவற்றை மீள் ஏற்றுமதி செய்வதற்கு பெப்ரவரி 10ஆம் திகதிக்கு பின்னர் தடை விதிக்கப்படும். அத்துடன் உருளைக்கிழங்கு விதைகளுக்கு விதிக்கப்படும் 100 வீத சுங்கத்தீர்வை நீக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.