“தேசிய விருது விழா – 2017” ஜனாதிபதி தலைமையில் ; மார்ச் 20 ஆம் திகதி

தாய்நாட்டுக்காக உன்னதமான பணியில் ஈடுபட்ட, உன்னதமான இலங்கையர்களுக்கு தேசிய விருது வழங்கப்படும் “தேசிய விருது விழா 2017” ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன தலைமையில் 2017 மார்ச் 20 ஆம் திகதி பிற்பகல் 6.00 மணிக்கு தாமரைத் தடாக கலையரங்கில் நடைபெறவுள்ளது.

“தேசிய விருது விழா – 2017”

தேசிய விருதுகளைப் பெறுவோர் தேசத்தின் பெருமை மற்றும் தாய்நாட்டின் மாண்பினை உயர்த்துவதற்காகவும், தேசத்தின் உன்னதமான கௌரவம் மற்றும் முன்னேற்றத்துக்காக அர்ப்பணித்த முதன்மையான இலங்கையர்களாவர்.

12 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் இந்த தேசிய விருது வழங்கும் விழாவில் இலங்கைக்காக சிறப்பாக சேவையாற்றியுள்ள 90 இலங்கை பிரஜைகளுக்கு ஜனாதிபதி அவர்களால் விருது வழங்கப்படவுள்ளதாக நேற்று முற்பகல் (16) முற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்காபிமான்ய, தேசமான்ய, தேசபந்து, விதயாஜோதி, ஸ்ரீலங்கா ரஞ்ஜன, கலாகீர்த்தி, ஸ்ரீலங்கா சிகாமணி, வித்யாநிதி, கலாசூரி, ஸ்ரீலங்காதிலக்க, வீர பிரதாப ஆகிய விருதுகள் ஜனாதிபதி அவர்களால் வழங்கப்படவுள்ளது. தேசிய விருது பெறும் இலங்கையர்களின் பெயர்ப்பட்டியல் இலங்கை அரசாங்கத்தின் வர்த்தமானியில் வெளியிடப்படுமெனவும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கையர்கள் அல்லாத நபர்களுக்கு வழங்கப்படும் தேசிய விருதான ஸ்ரீலங்கா ரத்ன, ஸ்ரீலங்கா ரஞ்ஜன விருதுகளும் வழங்கப்படவுள்ளது. விசேடமாக இலங்கைக்கும் பொதுவாக மனிதகுலத்துக்கும் ஆற்றிய உன்னத மற்றும் சிறப்பான சேவைக்காக அவ்விருது வழங்கப்படுகிறது.

1986 தேசிய விருது சட்டத்துக்கமைய உவந்தளிக்கப்படும் இந்த விருதுக்கு தகுதியானோர் அந்தந்த நபர்கள் மற்றும் பொது அமைப்புக்களால் அனுப்பப்படும் முன்மொழிவுகள் அறிஞர்களான நடுவர் குழுவினால் பரிசீலிக்கப்பட்டே தெரிவு செய்யப்பட்டனர். இம்முறை விருதுக்காக 426 விண்ணப்பங்கள் கிடைத்திருந்ததுடன், அவற்றில் 90 பேர் தெரிவு செய்யப்பட்டதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

“தேசிய விருது விழா – 2017”

பல்வேறு அமைப்புக்கள் மற்றும் நபர்களால் இதற்கு சமமான பெயர்களிலான பல்வேறு விருதுகள் வழங்கப்பட்ட போதிலும் அவற்றுக்கு எந்தவொரு உத்தியோகபூர்வ அங்கீகாரமும் இல்லையெனவும், ஜனாதிபதி அவர்களால் உவந்தளிக்கப்படும் தேசிய விருதுகளுக்கு மட்டுமே அங்கீகாரம் இருப்பதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோகண கீர்த்தி திசாநாயக்கா அவர்கள் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் டபிள்யூ.எம்.கருணாரத்ன, கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போபகே ஆகியோரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர்.