தேசிய கட்சிகள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றத்தருவதாக கூறி தமிழ் மக்களை ஏமாற்றியவர்கள்

தேசிய கட்சிகள்

தேசிய கட்சிகள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றத்தருவதாக கூறி தமிழ் மக்களை ஏமாற்றியவர்கள்

மாறிமாறி வந்த சிங்கள தேசிய கட்சிகள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றத்தருவதாக கூறி தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்தவர்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், தெரிவித்துள்ளார்.

அரசியல் தேவைக்காக சிறுபான்மை மக்களை பகடைக்காய்களாக மாற்றி சூதாட்ட அரசியல் செய்தவர்கள் எமது மக்களிடம் வந்து வாக்குகளை கேட்பதற்கு யோக்கியதையற்றவர்கள் என்றும் அவ் கூறினார்.

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளுராட்சி மன்ற தேர்தல் அலுவலகத்தை சனிக்கிழமை (13) மாலை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்

மட்டக்களப்பு வந்தாறுமூலை வட்டார வேட்பாளர் இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம், ஜனநாயக போராளிகள் கட்சியில் மட்டு-அம்பாறை இணைப்பாளர் க.பிரபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – இந்த தேர்தலில் படகில் வருபவர்கள் கடந்த கொலங்களில் பல வேட்டுக்களைத் தீர்த்தவர்கள். ஒழுக்கமான கட்டுக்கோப்பான சர்வதேசமே வியர்ந்து பார்க்கக்கூடிய விடுதலைப் போராட்டதை மௌனிக்கச் செய்வதற்கு துணை நின்றவர்கள். இவர்கள் தமிழ் மக்களிடம் வாக்கு கேட்பதற்கு யோக்கியதையற்றவர்கள். இவர்கள் பின் செல்பவர்கள் பகுத்தறிவு இல்லாதவர்களே.

கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடக் கூடாது என்பதற்காக புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகள் என பலரையும் படுகொலை செய்தவர்கள். தவிச்ச முயல் அடிப்பது போல் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடாத தேர்தல்களில் போட்டியிட்டு தற்காலிக வெற்றியைப் பெற்றவர்கள் தற்போது அதே கனவுடன் வருகிறார்கள். இவர்களுக்கு மக்கள் இம்முறை சரியான பாடம் புகட்ட வேண்டும்.

நாட்டிலுள்ள பெரும்தேசிய கட்சிகள் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் பல இழுத்தடிப்புக்களை மேற்கொண்டனர். இதன் காரணமாகவே எமது இளைஞர்கள் ஆயுதமெந்தி போராடினர்.

தமிழ் மக்களுக்கு என மொழி கலாசாரம் கட்சி உள்ளது. தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடுகின்றவர்கள் சோரம் போகாத கட்சியிலுள்ளவர்கள், கொள்கையுடன் செயற்படுபவர்கள், இலஞ்ச ஊழலில் அகப்படாதவர்கள் மக்களின் உரிமையையும் அபிவிருத்திiயும் ஒன்றாக மேற்கொள்ள வேண்டும் என்று செயற்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் தங்களது ஆணையை வழங்க வேண்டும்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]