தேசிய அரசில் இருந்து வெளியேறுகிறார் பிரதி அமைச்சர் விஜேசேகர

தேசிய அரசிலிருந்து தான் வெளியேறப்போவதாக அறிவித்துள்ள தபால் மற்றும் முஸ்லிம் விவகார பிரதி அமைச்சர் துலிப் விஜேசேகர, மேலும் 17 உறுப்பினர்கள் இதே நிலைப்பாட்டில் இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

தேசிய அரசமைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை அடுத்த ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவுக்கு வருகின்றது. அதன்பின்னரே தான் வெளியேறுவார் என்றும், இது பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் துலிப் விஜேசேகர கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேசிய அரசில் இணைந்து செயலாற்றிய காலப்பகுதியில் கம்பஹா மாவட்ட மக்களுக்கு என்னால் எதுவும் செய்ய முடியாமல்போனது. இது கவலையளிக்கின்றது. அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைக்கு முரணான செயற்பாடுகளும் அரசால் முன்னெடுக்கப்படுகின்றது. எனவேதான், மக்களின் கோரிக்கையின்படி இத்தகையதொரு முடிவை எடுத்துள்ளேன். என்னுடன் சு.கவிலுள்ள 17 உறுப்பினர்கள் இருக்கின்றனர்” – என்றார்.

துலிப் விஜேசேகர முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் பொருளாதார அமைச்சராக இருந்த பஸில் ராஜபக்ஷவுக்கு மிகவும் வேண்டப்பட்டவராகவும், அவரின் விசுவாசியாகவும் செயற்பட்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் மைத்திரி அணியுடன் கைகோர்த்தாலும், மஹிந்த அணிக்கு விசுவாசமாகவே செயற்பட்டு வருகின்றார் என்ற குற்றச்சாட்டும் இவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]