தேசிய அரசின் 2/3 பெரும்பான்மையை உடைத்தெறிய மஹிந்த அணி இராஜதந்திர வியூகம்

புதிய அரசமைப்பை தேசிய அரசு கொண்டு வருவதைத் தடுக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் இராஜதந்திர வியூகங்களை வகுத்து நாட்டில் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்றில் தேசிய அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை உடைத்தெறிவதே இவர்களின் தற்போதைய பிரதான இலக்காகவுள்ளது எனவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.

2015ம் ஆண்டு பொது வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டபோது புதிய அரசியல் அமைப்பொன்றை கொண்டு வருவதும், தேர்தல் முறைமையை மறுசீரமைப்பதுமே அவரின் பிரதான தேர்தல் வாக்குறுதிகளாகக் காணப்பட்டன.

அதனடிப்படையில் தற்போது தேர்தல் மறுசீரமைப்பு மற்றும் புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவருவதற்கான அனைத்து அடித்தளங்களும் இடப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலப்புத் தேர்தல் முறையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டமூலம் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையாளர் விடுப்பார். எதிர்வரும் டிசம்பர் முதல் வாரத்துக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த மாதம் புதிய அரசமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பையடுத்தே தேசிய அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தரப்பு அதிருப்தியடைந்துள்ளது.

இதுவரை காலமும் அரசமைப்பு மறுசீரமைப்புக்கே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், புதிய அரசமைப்புக்குப் பச்சைக்கொடி காட்ட சு.கவின் மத்திய குழுவும் தயாராகும் சூழல் உருவாகியுள்ளதாலே கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.

இதனைச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சு.கவின் அதிருப்திக் குழுவினரை தேசிய அரசிலிருந்து பிரித்தெடுக்க மஹிந்த தரப்பு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

சு.கவின் அதிருப்திக் குழுவினரைத் தக்கவைத்துக்கொள்ள ஜனாதிபதியும், சு.கவின் மத்திய குழுவும் அயராது பாடுபடுகின்ற போதிலும் அவர்களிடமிருந்து இதுவரை சாதகமான சமிக்ஞை எதுவும் கிடைக்கவில்லை.

தேசிய அரசிலிருந்து வெளியேறவுள்ளதாகக் கூறப்படும் சு.கவின் அதிருப்திக் குழுவைச் சேர்ந்த 18 பேரை மஹிந்த அணியினர் தமது பக்கம் இழுத்துக்கொள்ளும் பட்சத்தில் தேசிய அரசுக்கு நாடாளுமன்றிலுள்ள பெரும்பான்மை கேள்விக்குறியாகி விடும்.

அதனை அடிப்படையாகக்கொண்டு நாட்டில் ஏற்படும் ஸ்திரமற்ற தன்மையால் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்கு வேட்டையை நடத்த இராஜதந்திர காய்நகர்த்தலை மஹிந்த அணியினர் மேற்கொண்டு வருகின்றனர் என அறியமுடிகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]