தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை!!

தேசிய அடையாள அட்டை விண்ணப்பிப்பதற்கான வயதெல்லையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய 15 வயது முழுமையடைந்தவர்கள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு முதல் இது செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கு அதிக சந்தர்ப்பம் வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் 16 வயது முழுமையடைந்த நாட்டு பிரஜைகளுக்கே அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளது.

வயது முழுமையடையாத மாணவர்கள் பல்வேறு சிக்கலுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதனை கருத்தில் கொண்டு இந்த வயது எல்லை குறைக்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் முறையில் எவ்வித மாற்றமும் எற்படாதென தெரிவிக்கப்படுகின்றது.

சாதாரணதர பரீட்சை எழுதும் மாணவர்கள் அடையாள அட்டை விண்ணப்பிப்பதற்காக பிறப்பு சான்றிதழ் மற்றும் தெளிவான புகைப்படம் சமர்ப்பித்தால் போதுமானதென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்காக பிரதேச செயலகத்தினால் உறுதி செய்யப்பட்ட அல்லது பதிவாளர் ஜெனரல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பிறப்பு சான்றிதழின் நகல் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

இதேவேளை, புதிய அடையாள அட்டையில், முன்னர் பயன்படுத்திய 9 இலக்கங்களை கொண்ட அடையாள அட்டையின் இறுதி ஆங்கில எழுத்து நீக்கப்பட்டு 12 இலக்கங்களை கொண்ட அடையாள அட்டை விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]