தேசியக்கொடிக்கு உண்மையான அர்த்தம் “நாங்களெல்லாம் ஒரே அன்பான அன்னையால் பெற்றெடுக்கப்பட்ட அழகான குழந்தைகள்’ என்று. இந்த வரிகளுக்கு உண்மையான நடைமுறை ரீதியான அர்த்தம் கொடுக்கப்பட வேண்டுமென கிழக்குமாகாண விவசாய மற்றும் மீன்பிடி அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெற்ற ஜப்பான் சொட்டோகான் இலங்கை கிழக்கு மாகாண கராத் தேசங்கத்தின் பயிலுனர்களுக்கான இருநாள் பயிற்சிப் பட்டறையின் நிறைவுநாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
தேசியக்கொடியை ஏற்றிவிட்டு நாங்கள் பாடுகின்றோம். நாங்களெல்லாம் ஒரு தாயால் பெற்றெடுக்கப்பட்ட அழகான குழந்தைகள்.ஒரு தேசியக் கொடியை ஏற்றி பாடிவிட்டு நாங்கள் இவ்வளவு காலமும் ஒரு இனத்தின் மீது இன்னொரு இனம் படையெடுத்தும் ஒருவரை யொருவர் சுட்டுக்கொண்டும், ஒருவருடைய சொத்தை இன்னொருவர் கொள்ளையடித்தும், தீவைத்து எரித்தும், ஒருவருடைய துன்பத்தால் இன்னொருவர் மகிழ்ச்சியடைந்தும் தான் இருக்கின்றோம்.
இப்பிரச்சினை ஏற்பட்டதற்கு காரணம் இந்த நாடு பல இன பல மொழி பல மதங்களைக் கொண்ட ஒருநாடு என்பதனை இரு களத்தினரும் ஏற்கமறுத்ததுதான். ஜனாதிபதி இந்த நாடு பன்மைத்துவ சமூகம் உள்ள நாடு என்று சொல்லியிருக்கிறார். அந்தச் செய்தி எல்லா இடங்களுக்கும் பரப்பப்பட வேண்டும். இந்த நாட்டினுடைய மக்கள் என்ற எண்ணத்தோடு நாங்களும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்ற செய்தியினை தென்பகுதி மக்களுக்கும் சொல்லிட வேண்டும் என்றார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]