தென்பகுதியில் கிரீஸ் மனிதனின் அடாவடி தலைவிரித்தாடுகிறது

தென்பகுதியில் கிரீஸ் மனிதனின் அடாவடி தலைவிரித்தாடுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் வடக்கு – கிழக்கில் தலைவிரித்தாடிய கிரீஸ் மனிதன் அட்டகாசம் இப்போது தெற்கில் ஆரம்பமாகியுள்ளது.

களுத்துறை, மாத்தறை, ஹங்வெல்ல மற்றும் வெல்லவாய போன்ற இடங்களில் இரவு நேரங்களில் கறுப்பு உடை அணிந்துகொண்டு பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளுக்குச் சென்று அவர்களைப் பயமுறுத்துவது, அவர்களின் உடைகளை எடுத்துக்கொண்டு போவது,வீடுகளுக்குக் கல் எறிவது எனத் தினமும் இந்த அட்டகாசம் இடம்பெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

தென்பகுதியில் கிரீஸ்

பொலிஸார் இவர்களைத் தேடி வலை விரித்துள்ளனர்.தெற்கில் ஒரு வாரமாகப் பரவலாக இடம்பெற்றுவரும் கிரீஸ் மனிதர்களின் அட்டகாசத்தில் உயிரிழப்பு ஒன்றும் ஏற்பட்டுள்ளது.
ஹங்வெல்ல பகுதியில் அட்டகாசம் புரிந்து வந்த கிரிஸ் மனிதனைப் பிடிப்பதற்காக விரட்டிய இளைஞர் ஒருவர் இருட்டில் தடுமாறி கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதேபோல் மாத்தறை அக்குரஸ்ஸைப் பகுதியிலும் இந்த கிரீஸ் மனிதர்கள் கைவரிசை காட்டத் தொடங்கியுள்ளனர்.

இரவு நேரங்களில் முகத்தை மறைத்துக்கொண்டு வீட்டில் தனியாக இருக்கும் பெண்களையும் வீதிகளில் செல்லும் பெண்களையும் பயமுறுத்தி வருகின்றனர் என்று சிங்கள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கடந்த திங்கட்கிழமை வெல்லவாய நகரில் ஒருவர் மக்களால் பிடிக்கப்பட்டு மரத்தில் கட்டப்பட்டார். பெண்களிருக்கும் வீடுகளில் நிர்வாணமாகத் தோன்றிவிட்டு ஓடிவிடுவதை இவர் வழக்கமாகச் செய்து வந்துள்ளார் என்று அவரைப் பிடித்த மக்கள் கூறுகின்றனர்.

பல நாள் காத்துக் கிடந்து அவரை மக்கள் பிடித்து மரத்தில் கட்டி பொலிஸில் ஒப்படைத்ததனர். தான் ஒரு மனநோயாளி என்றும், அதற்காகத் தான் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கிரீஸ் மனிதர்களின் கல்வீச்சில் களுத்துறையில் பலர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு கிரீஸ் மனிதர்கள், மர்ம நபர்கள் என்று வெவ்வேறு பெயர்களில் பெண்களை மாத்திரம் குறி வைத்து தெற்கில் பல இடங்களில் இந்த அட்டகாசம் இடம்பெற்று வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]