தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு

தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்க சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அழைப்புவிடுத்துள்ளனர்.

மக்களின் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவந்த தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் செப்புத் தொழிற்சாலையை மூடக்கோரி அமைதியான முறையில் போராடி வந்த மக்கள் அந்தப் போராட்டத்தின் நூறாவது நாளன்று மேற்கொண்ட ஊர்வலத்தின்மீது தமிழக போலிசாரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையைக் கண்டிக்கும் கவனயீர்ப்பு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 31 காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்படவுள்ளது.

மன்னார் வளைகுடாக் கடல் நிலத்தடி நீர் காற்று ஆகிய இயற்கைச் சூழலைச் சீரழித்து புற்றுநோய் போன்ற பாரதூரமான நோய்களை உருவாக்கி மக்கள் பலர் பலியாகவும் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகவும் காரணமாக இருந்த இந்த செப்பு ஆலையை மூட இருபது வருடங்களுக்கு மேலாகப் போராடி வந்த தூத்துக்குடி மக்களின் கோரிக்கைகளைக் கருத்தில் எடுத்துத் தீர்வை வழங்காத இந்திய மத்திய அரசும் தமிழக மாநில அரசும் போராடிய மக்கள்மீது கடந்த வாரம் பெரும் வன்முறையைக் கட்டவிள்த்து விட்டுள்ளது.

இதில் 13 க்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 60 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தும் 100 மேற்பட்டோர் கைது செய்யப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் உள்ளனர். இம் மக்கள் போராட்டங்களின் பின்னர் குறித்த ஸ்டெர்லைட் ஆலை சட்டவிரோதமானது எனக்கூறி அதைப் பூட்டியுள்ள அரசு சரியானதும் சட்டரீதியானதுமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய மக்கள்மீது வன்முறையைக் கட்டவிள்த்து விட்டதோடு அல்லாமல் இப் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இதுவரை எந்தவொரு நீதி விசாரணைகளையும் முன்னெடுக்கப்படாமை கண்டிக்கத்தக்கதாகும்.

எனவே வேதாந்தா என்ற பெருமுதலாளிய நிறுவனத்தின் இலாப வெறிக்காக மக்களைப் பலிகொண்ட தமிழக அரசின் வன்செயல்களை எதிர்த்து இடம்பெறவுள்ள கவனயீர்ப்பில் அரசியல் கட்சிகள் பொது அமைப்புக்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவரையும் அணிதிரளுமாறு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அழைப்பு விடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]