திறன்மிக்க ஆளுமையுடனான மக்கள் பிரதிநிதிகளை உருவாக்க வேண்டும்

திறன்மிக்க ஆளுமையுடனான மக்கள் பிரதிநிதிகளை உருவாக்க வேண்டும்

தமிழ் சமூகத்தின் அரசியல், நிர்வாக அடிப்படைக் கட்டுமானங்களைப் பலப்படுத்துவதன் மூலம் தமிழ்த் தேசியப் பற்றுறுதி கொண்ட, திறன்மிக்க ஆளுமையுடனான மக்கள் பிரதிநிதிகளை உருவாக்குவதற்கான வழிமுறைகளையும் கலந்துரையாடல்களையும் ஆரம்பித்துள்ளதாக தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய சூழலில் மக்களுக்குச் சேவையாற்றக் கூடிய அர்ப்பணிப்பும் சேவை மனப்பான்மையும் கொண்ட இளைய சமுதாயத்தின் பங்கேற்புடன் கூடிய அரசியற்களத்தின் தேவை பெரிதும் உணரப்படுகின்றது.

நாளைய தலைவர்களாக மிளிரக் கூடிய இளைய சமூகத்தோடு இணைந்து செயற்படவும் சமூகத்தின் அடிப்படைக் கட்டுமானங்களில் தேர்ச்சிபெறவும், வெளிப்படைத் தன்மை கொண்ட நிர்வாக அமைப்புக்களைக் கட்டியமைக்கவும் தமக்கான ஓர் வாய்ப்பைத் தேடிக் காத்திப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிர்வாக அனுபவமும் வினைத்திறன் மிக்க ஆளுமைப் பண்பும் பொருந்திய குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலான ஓய்வுபெற்ற அரசாங்க மற்றும் தனியார்துறை அதிகாரிகள், ஊழியர்கள் தமது அனுபவ அறிவை மக்களுக்கான சேவையின்பால் தொடரவும் ஆர்வமுள்ளவாகளாக இருப்பது அவதானிக்கப்படுகிறது.

தமது பிரதேசங்களில் இருக்கக்கூடிய முன்னேற்றகரமான வாய்ப்புக்களையும் அவற்றை சமூகப்பயன் கொண்டவையாக எய்துவதில் இருக்கக்கூடிய சவால்களையும் தமது வாழ்வில் அல்லும் பகலும் சந்தித்துவரும் மக்கள் சேவையாளர்கள் பலர், இயலுமானவகைகளில் தமது திறன்களை ஆக்கபூர்வமாக மடைதிறந்துவிட விருப்புக் கொண்டவர்களாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு நிகராக, பலசமயங்களில் மேனிலையில் நிர்வாகத்திறன் கொண்டும், சமூகத்தின் மீது அக்கறையுடன் செயற்படும் பெண்கள் சமூகத்தின் முன்னோடிகளாக, இருந்துவருகின்றனர்.

பகிரங்கத்தன்மையான, திறந்த, திறன்மிக்க அதிகாரப் பொறிமுறையை அடித்தள அமைப்புக்களில் உறுதிப்படுத்திக் கொள்ளவும், ஊழலற்ற, அதிகாரப் போட்டிகளற்ற, மக்கள் சேவை என்றமகுடத்திற்குள் நின்று நிலைபெறக்கூடிய நிர்வாகங்களை ஊரக அளவில் உருவாக்கிக் கொள்ளவுமான ஒருவாய்ப்பை மிகச் சரியான தெரிவுகளின் அடிப்படையிலான பிரதிநிதித்தவத்தின் மூலம் பெறமுடியுமானால், அதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதற்கும், ஒத்த சித்தனைகளுடன் பயணிப்பவர்களுடன் அதற்காக கைகோர்த்துக் கொள்ளவும் தமிழ் மக்கள் பேரவை தயாராக உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்கான கலந்துரையாடல்களும் கருத்தப் பகிர்வுகளும் தமிழ் மக்கள் பேரவையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]