திரைப்படமாகும் எம்.ஜி.ஆர்-ன் வாழ்க்கை வரலாறு

காமராஜ் திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக எம்.எஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகத் தயாரிக்கப்படுகிறது.

தமிழக மக்களின், குறிப்பாக ஏழை, எளியோர், விளிம்பு நிலை, மக்களின் இதயங்களில் அவதார நாயகனாக வாழ்ந்து மறைந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள்.

இளமையில் நாடக நடிகராக இருந்தபோதே அரசியலில் அதீத ஆர்வம் கொண்டவராக இருந்தார் எம்.ஜி.ஆர். காங்கிரஸின் மீது பெரும் பற்று கொண்டவராகவும், தேசியத்தின் மீது அக்கறை கொண்டவராகவும் இருந்தார்.

அந்நாட்களில் அவர் கதர் வேஷ்டி சட்டைகள் மட்டுமே அணிந்தார். திரைத்துறையில் அவர் உச்ச நட்சத்திரமாக உயர்ந்தபோது, அவரது புகழையும், கவர்ச்சியையும் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட திராவிட முன்னேற்றக் கழகம் அவரைத் தன்பால் ஈர்த்துக் கொண்டது.

என்றாலும், அண்ணாவின் மறைவிற்கு பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் செயல்பாடுகளில் ஒவ்வாமை கொண்ட எம்.ஜி.ஆர் அதிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார்.

தன் வாழ்வின் இறுதிவரை யாராலும் வெல்ல முடியாத சரித்திர நாயகனாக சாதனை படைத்தார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளராக சாதித்த அவர் தமது படங்களை ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிடும் வகையில் தொழில்ட்பம், உருவாக்கத்தில் அக்கறை செலுத்தினார். காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி என்று திறந்த உள்ளத்துடன் ஒப்புக் கொண்ட அவர், தன் ஆட்சிக் காலத்தில் காமராஜரின் மதிய உணவுத்திட்டத்தை சத்துணவு திட்டமாக திறம்பட தொடர்ந்தார்.

அண்ணாவால் ஈர்க்கப்பட்டு திராவிட கட்சியில் இணைந்தவர், தமது திரைப்படங்களில் தேசத் தந்தை மகாத்மா காந்தியையும், புத்தரையும் தாங்கிப் பிடித்தார்.

அவர் திரைத்துறையிலும், அரசியலிலும் சந்தித்த சவால்கள், சோதனைகள், சூழ்ச்சிகள், அதை முறியடித்து வெற்றிக் கண்ட சுவாரஸ்யமான சம்பவங்கள் திரைக்கதையாக தொகுக்கப்பட்டுள்ளது. எவ்வித சமரசமுமின்றி எம்.ஜி.ஆர்-ன் வாழ்க்கை சம்பவங்களை கொண்டு மிகப் பிரம்மாண்டமாய் தயாராகும் இப்படத்திற்கு, அன்றைய அரசியல் தலைவர்களின் உருவ ஒற்றுமையுள்ள நடிகர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் துவங்க உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]