மட்டக்களப்பு திராய்மடுவில் அமைக்கப்பட்டுவரும் கைத்தொழில் பேட்டையின் மூலம் எமது பிரதேச தொழில் முயற்சியாளர்கள் தங்களையும், தங்கள் உற்பத்தி சார்ந்தவர்களையும் ஈடுபடுத்தி இன்னும் முன்னேறக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்லடியில் பாரம்பரிய உள்ளூர் உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலைய வர்த்தக மையத்தினைத் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இந்தக் கடைத் தெகுதியினூடாகப் பல்வேறு விடயங்கள் இடம்பெறும் என்று நாங்கள் திடமாக நம்புகின்றோம். உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிக்கின்ற செயற்பாடு இங்கு இடம்பெறுகின்றது. எமது பிரதேசங்களிலே உள்ளுர் உற்பத்தியாளர்கள் தேசிய உணவு உற்பத்தியாளர்கள் அதிகம் இருக்கின்றார்கள். இவ்வாறான உள்ளுர் உற்பத்திப் பொருட்களை சரியான முறையில் நாங்கள் சந்தைப் படுத்துகின்ற போது இதற்கான கேள்வி மிகவும் நிறைவாக இருக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.
வெவ்வேறு பொருட்கள், தரமான சுகாதாரமான உற்பத்திகள் இங்கே கொண்டதாக இக்கடைத் தொகுதி கட்சிதமாக அமைக்கப்பட்டிருப்பதும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இதனூடாக பெண்கள் வலுவூட்டல் செயற்பாடு இடம்பெற்றுள்ளது.
இதுபோன்று திராய்மடு பிரதேசத்தில் ஒரு தொழிற்பேட்டை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றது. அந்த தொழிற்பேட்டையில் எமது பிரதேச தொழில் முயற்சியாளர்கள் தங்களையும், தங்கள் உற்பத்தி சார்ந்தவர்களையும் ஈடுபடுத்தி இதனை மேற்கொண்டு இன்னும் முன்னேறக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கு அரசாங்கம் சில ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றது. அந்த சந்தர்ப்பங்களை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மரபு ரீதியான உணவுப் பொருட்களை இங்கே பெறக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இரண்டு விடயங்கள் இந்தப் பிரதேசத்தில் மிகவும் முக்கியானதாக இருக்கின்றது. ஒன்று இப்பிரதேசத்தின் சுற்றாடல் சம்பந்தமான விடயத்திலே அனைவரும் கவனம் எடுக்க வேண்டும். கழிவு நீர் முறையான வசதியில் அகற்றப்பட வேண்டும், அழகு பேணப்பட வேண்டும்.
மற்றுமொரு விடயம் கல்லடிப் பாலம் என்பது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒரு அடையாளமாக இருக்கின்ற பிரதேசம் அந்த அடையாளம் மறையாத வகையிலே உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தடையில்லாத வகையில் செயற்படுத்த வேண்டும். இதனை மேலும் அழகுபடுத்துவதற்கும், பழைய பாலத்தினையும் பொலிவூட்டுவதற்கு நாங்கள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிஒதுக்கீட்டில் மாவட்ட அபிவிருத்தி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ்(நுரு-ளுனுனுP) மாவட்ட செயலகத்தின் கண்காணிப்புடனும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்ட நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடனும் வறுமைப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதரத்தை உயர்த்தும் நோக்கில் ரூபா 12மில்லியன் நிதியில் கல்லடி பாலத்தருகில் கட்டி முடிக்கப்பட்ட வர்த்த மையத்திறப்பு விழா மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தலைமையில் இடம்பெற்றது.
இவ்வர்த்த மையத்தை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம்-உதயகுமார் பிரதம அதிதியாக வருகை தந்து திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் என்.மணிவண்ணன்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன்,மாநகரசபை பிரதி ஆணையாளர் என்.தனஞ்சயன், மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகள் அபிவிருத்திதிட்ட நிறுவனத்தின் பிரதிநிதிகள், மாவட்ட செயலகத்தின் பொருளாதார உத்தியோகஸ்தர்கள், ஊடகவியலாளர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.
இதன்போது உள்ளுர் உற்பத்திக்களான கருவாடு, கூனிவகைகள், நஞ்சற்ற பழவகைகளும்,காய்கறிகளும், இலைவகைகளும்,பிரம்பு பனையோலை உற்பத்திப்பொருட்கள்,சுத்தமான தேன்கள், சௌபாக்கியா உணவுகளும், தானிய உணவுகளும், நெசவு உற்பத்தி பொருட்கள் உள்ளிட்ட பதினொரு வகையான வர்த்தக மையங்களை அதிதிகள் திறந்து வைத்தார்கள்.
இதன்போது ஒவ்வொரு கடைத்தொகுதிக்குமான ஆவணங்களையும்,சாவிக்கொத்துக் களையும் அரசாங்க அதிபர் மா.உதயகுமார் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் என்.மணிவண்ணனிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]