தியாக தீபம் திலீபனின் 30வது நினைவு நாள் யாழில் எழுச்சியுடன் நடைபெற்றது.

ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று (26.09) காலை நல்லூரில் இடம்பெற்றது.

தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வடக்கு வீதியில் சுமார் 10.55 மணியளவில் இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பின் வீதியில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தினர்.

பொது ஈகைச் சுடரினை ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர் கதிர் ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் மற்றும் ஊடக இணைப்பாளர் துளசி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட வடமாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் சுகிர்தன், முற்போக்கு ஜனநாயக கட்சியின் உறுப்பினர் பாஸ்கரா மற்றும் பொது மக்கள், எனப்பலர் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

போராளி ஒருவர் கைதடி பகுதியில் இருந்து தூக்கு காவடி எடுத்து வந்து தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியில் அஞ்சலி செலுத்தினார்.