முகப்பு News India திமுகவின் கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின்??

திமுகவின் கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின்??

எதிர்வரும் 14-ஆம் திகதி (செவ்வாய்கிழமை) நடைபெறவுள்ள திமுகவின் அவசர செயற்குழு கூட்டத்தில் கட்சித் தலைவராக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த அறுபது ஆண்டுகளாக கருணாநிதியைச் சுற்றியே சுழன்று கொண்டிருந்த திமுக, அவரது 50 ஆண்டு தலைவர் பதவியில் அடியெடுத்து வைத்த நிலையில் ஏற்பட்ட மறைவால் திமுக ஸ்தம்பித்துப் போய் நிற்கின்ற நிலையில், திமுகவுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக பொதுச் செயலாளர் பேராசியர் அன்பழகனை செயல் தலைவர் மு.க ஸ்டாலின் சந்தித்துள்ளார். திமுக பொது குழு, மாநில சுயாட்சி மாநாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பொதுக்குழு 19-ஆம் திகதி நடைபெற இருந்த நிலையில் கருணாநிதி மறைவையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதையடுத்து எதிர்வரும் 14-ஆம் திகதி செவ்வாய்கிழமை அண்ணா அறிவாலயத்தில் திமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனவும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பின் நடைபெறவுள்ள முதல் செயற்குழு கூட்டத்தில் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்துவது உள்பட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

தற்போது செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் திமுகவின் அடுத்த தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு திமுகவில் இருந்து நீக்கப்பட்ட தென்மண்டல அமைப்புச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.அழகிரி சமரசம் அடையாமல் இருந்து வந்த நிலையில் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 11 நாட்களும் அழகிரியும் சகோதரர் ஸ்டாலினும் பலமுறை பேசியுள்ளதாகவும் அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் மட்டத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. எனவே அழகிரிக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தலைவராக தேர்வு செய்யப்பட உள்ள தம்பி ஸ்டாலினுக்கு, அண்ணன் அழகிரி ஆதரவு வழங்குவார் என்றே பரவலாக பேசப்பட்டு வருகிறது. தன் தந்தை கட்டி காத்து வந்த பெருமைகளை தனது தம்பி ஸ்டாலினுக்கு அண்ணன் அழகிரி அளிக்கும் ஆதரவிலும் அரவணைப்பிலும் உள்ளது என்றும் அப்படிப்பட்ட ஆதரவை தம்பி ஸ்டாலினுக்கு அண்ணன் அழகிரி வழங்குவார் என்றே நம்பப்படுகிறது.

தமிழக அரசியலில் முக்கிய தலைவர்களாகவும் கோடானுகோடி மக்களுக்கும் முகம் தெரிந்தவர்களாகவும் பேசப்பட்டு வந்தவர்களுமான ஜெயலலிதா, கருணாநிதி இருவரும் மறைந்துவிட்ட நிலையில் தற்போது அதிமுகவில் அப்படியொரு தலைவர்கள் இல்லாத நிலையே தொடர்கிறது. திமுகவில் கருணாநிதியை அடுத்து அவரது வாரிசாகவும், இளைஞரணித் தலைவராகவும், துணை முதல்வராகவும் மேயராகவும் எதிர்க்கட்சி தலைவராகவும் செயல் தலைவராகவும் தமிழகம் முழுவதும் மக்களுக்கு தெரிந்த முகமாக இருந்து வருபவர் ஸ்டாலின்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com