தாமரை மொட்டு அணியினர் ஸ்ரீலமுகாவுக்குத் தாவினர்

தாமரை மொட்டு

மஹிந்தவின் தாமரை மொட்டு அணியினர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பிலான ஸ்ரீலமுகாவுக்குத் தாவினர் – ஏறாவூரில் திடீர் திருப்பம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தாமரை மொட்டு அணியின் சார்பில் ஏறாவூர் நகர சபைக்கான வேட்பாளர்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பிலான ஸ்ரீலமுகாவுக்குத் தாவியுள்ளனர்.

மட்டக்களப்பு ஏறாவூரில் இந்த திடீர் வருகை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் முன்னிலையில்இடம்பெற்றது.

ஏறாவூர் நகர சபைக்கான வேட்பாளர் கே.எல். அக்கீல் அர்சாத் தலைமையிலான குழுவினர் கடைசி நேரம் வரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தாமரை மொட்டு அணியின் வெற்றிக்காக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்திருந்த வேளையில் எவரும் எதிர்பாராத விதத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பிலான ஸ்ரீலமுகாவுக்குத் தாவியுள்ளனர்.

திடீரென ஐக்கிய தேசியக் கட்சி பிரச்சார மேடைக்கு வந்தமர்ந்த அவர்கள் அனைவரும் முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் உடன் தாங்கள் நிபந்தனையின்றி இணைந்து கொள்வதோடு அந்த அணியின் வெற்றிக்காகப் பாடுபடவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஏறாவூர் நகரின் திட்டமிட்ட பெரு நகர அபிவிருத்திக்கான குறிக்கோளை முன்னாள் முதலமைச்சர் கொண்டிருப்பதால் தாங்கள் இந்த ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் அணியில் இணைந்து கொண்டிருப்பதாக அக்கீல் அர்சாத் தெரிவித்தார்.

எதிர்வரும் 26 ஆம் திகதி ஏறாவூர் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தின் சில இடங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருகை தரவுள்ளதாக எதிர்பார்க்கப்பட்டிருந்த வேளையில் தாமரை மொட்டு வேட்பாளர்களின் இந்த கட்சித் தாவல் இடம்பெற்றுள்ளது.

தாமரை மொட்டுக் கட்சியின் தலைமைகள் ஏறாவூர்ப் பகுதியில் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடும் அக்கட்சி சார்பிலான அபேட்சகர்களை புறக்கணித்து விட்டிருப்பதாக அதிருப்தியாளர்களான வேட்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]