தலைமறைவாகியிருந்தவர்கள் கைது பொருட்கள் சிலவும் மீட்பு

ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடிப் பிரதேசங்களில் கட்டிட நிர்மாண உபகரணங்களை வாடகைக்கு விடும் உரிமையாளர்களிடமிருந்து பல இலட்ச ரூபாய் பெறுமதியான கட்டிட நிர்மாண உபகரணங்களை வாடகைக்குப் பெற்றுக் கொண்டு தலைமறைவாகியிருந்த இருவர் செவ்வாய்க்கிழமை 28.08.2018 கைது செய்யப்பட்டுள்ளதாக எறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கடந்த ஜுலை மாதம் ஏறாவூர் மற்றும் வாழைச்சேனைப் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாக விசாரணைகளில் ஈடுபட்டு வந்த பொலிஸார் தலைமறைவாகியிருந்த சந்தேக நபர்கள் இருவரை சுமார் ஒன்றரை மாதங்கள் கடந்து செவ்வாய்க்கிழமை 28.08.2018 கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைவாக சந்தேக நபர்கள் வாடகைக்குப் பெற்று திருப்பிக் கொடுக்காமல் வேறு ஊர்களில் விற்பனை செய்திருந்த கட்டிடப் பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தவகையில் உயர்ந்த கட்டிடங்களை நிருமாணிக்கப் பயன்படும் சுமார் 450 முட்டுக் கம்புகளை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நபர்களினால் வாடகைக்குப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள பல இலட்ச ரூபாய்கள் பெறுமதியான கட்டிட நிர்மாண உபகரணங்கள் பல மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் மீளக் கையளிக்கப்படவில்லை என்றும் அப்பொருட்களை சந்தேக நபர்கள் வேறு பகுதிகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்திருக்கிறார்கள் என்றும் முறைப்பாடு தெரிவிக்கப்ட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார் சந்தேக நபர்களால் பெற்றுக் கொள்ளப்பட்டு திருப்பிக் கொடுக்காமல் அபகரிக்கப்பட்ட ஏனைய கட்டிட நிருமாண உபகரணங்களை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]