தற்போதைய நல்லாட்சி அரசிலும் எவ்வித நீதியும் கிடைக்கவில்லை- (முன்னாள் பா.உ பா.அரியநேத்திரன்)

முள்ளிவாயக்கால் விடயத்திற்கு தற்போதைய நல்லாட்சி அரசிலும் எவ்வித நீதியும் கிடைக்கவில்லை. இலங்கை அரசாங்கத்தை நாங்கள் நம்ப முடியாது. எமக்கான தீர்வையும், இந்த இனப்படுகொலைக்கான நீதியையும் சர்வதேசமே எமக்குத் தரவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கிரான் ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

முள்ளிவாய்க்கால் 09ம் ஆண்டு இனப்படுகொலை நாள். மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக நாம் இந்த நிகழ்வினை நடத்தி வருகின்றோம். 09 வருடங்கள் கடந்தும் சர்வதேசத்தினால் இன்னும் இதற்கான நீதி வரவில்லை என்ற செய்தியுடன் தான் இந்த நினைவேந்தலில் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம். அத்துடன் இலங்கை அரசாங்கத்தினால் இனப்படுகொலை செய்யப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் விடயத்திற்கு தற்போதைய நல்லாட்சி அரசிலும் எவ்வித நீதியும் கிடைக்கவில்லை.

2010ம் ஆண்டு நாங்கள் மட்டக்களப்பில் இந்த நினைவேந்தலை நடாத்துகின்ற போது வடக்கு கிழக்கில் எவருமே இதனை அனுஷ்டிக்கவில்லை. எல்லோரும் பயத்தில் இருந்தார்கள். மஹிந்தவின் கெடுபிடி அச்சுறுத்தல் இருக்கின்ற காலகட்டத்திலே மட்டக்களப்பு மண்ணில் மாத்திரம் அதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தான் இந் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. அன்று தொடக்கம் இன்று வரை தொடர்ச்சியாக இதனை நாங்கள் அனுஷ்டித்து வருகின்றோம்.

முள்ளவாய்க்காலிலே ஒருலெட்சத்திற்கும் அதிகமான மக்கள், ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதுவரை எவ்வித நீதியும் இல்லை. ஆனால் அரசாங்கம் தொடர்ச்சியாக நல்லிணக்கம் என்று கூறிக்கொண்டு இருக்கின்றதே தவிர இதனால் எந்தப் பயனும் எமது மக்களுக்குக் கிடைக்கவில்லை.
இதன் காரணமாகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியற் பயணம் சர்வதேச ரீதியில் இராஜதந்திர முறையில் செல்கின்றது. இந்த நேரத்தில் நாம் கேட்கின்ற விடயம் என்னவென்றால் இலங்கை அரசாங்கத்தை நாங்கள் நம்ப முடியாது எனவே எமக்கான தீர்வை, இந்த இனப்படுகொலைக்கான நீதியை சர்வதேசமே எமக்குத் தரவேண்டும். அத்துடன், அரசியற் தீர்வும் விரைவில் கிடைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றோம் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]