தயாரிப்பாளர் சங்கத்திடம் வருத்தம் தெரிவித்தார் விஷால்!

தயாரிப்பாளர் சங்கத்திடம் வருத்தம் தெரிவித்தார் விஷால்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும் நடிகருமான விஷால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் சங்கம் குறித்து அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்ததாக சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நடவடிக்கையை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது,

‘விஷால் தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறினால், அவரது இடைநீக்கம் உத்தரவை மீண்டும் பரிசீலிக்கலாம் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்  ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இதுகுறித்து விஷால் தரப்பின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அவரது வழக்கறிஞருக்கு  உத்தரவிட்டார். இந்நிலையில் விஷால் இன்று வருத்தம் தெரிவித்த மனு ஒன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில், ‘சம்பந்தப்பட்ட பேட்டியில் தன்னுடைய கருத்து யாருக்காவது மன வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால்  வருத்தம் தெரிவிப்பதாகவும், யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது தனது நோக்கம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

விஷாலின் இந்த வருத்த மனு குறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழுவில் பேசி முடிவு செய்யப்படும் என்று, இன்று தயாரிப்பாளர் சங்க வழக்கறிஞர் கூறியதை தொடர்ந்து இந்த வழக்கு ஜனவரி மாதம்  6ஆம் திகதிக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.