தமிழ் – முஸ்லிம் சகோதர நல்லுறவில் மீண்டும் விரிசலை ஏற்படுத்துவதற்கு முயற்சி

தமிழ் – முஸ்லிம் சகோதர நல்லுறவில் மீண்டும் விரிசலை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்கின்ற இனவாத சக்திகள் குறித்து அவதானம்.

தமிழ் - முஸ்லிம்

கிழக்கு மாகாணத்தில் தமிழ் – முஸ்லிம் சகோதர நல்லுறவில் மீண்டும் விரிசலை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்கின்ற இனவாத சக்திகள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு ஏறாவூர் – பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மட்டக்களப்பு – ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் நேற்றிரவு 30.10.2017 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத்தெரிவிக்கையில் சம்மேளனத்தின் புதிய தலைவர் அஷ்ஷேக் மௌலவி எம்எல். அப்துல் வாஜித் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

இந்த ஊடக சந்திப்பில் சம்மேளனத்தின் செயலாளர் எம்.எல். செய்யத் அஹமட், ஊடக இணைப்பாளர் எஸ்.அப்துல் ஹமீட் உள்ளிட்ட பலர் பிரசன்னமாயிருந்தனர்.

இங்கு சம்மேளனத்தின் தலைவர் தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில் தமிழ்- முஸ்லிம் சகோதர நல்லுறவைக் கட்டியெழுப்புவதில் சம்மேளனம் மிகுந்த ஆர்வத்துடன் செயற்படுவதாகவும், குறிப்பாக ஏறாவூர் பிரதேசத்தில் தமிழ் சகோதரர்கள் எவ்வித தயக்கமுமின்றி தொழில் நடவடிக்கையில் ஈடுபட முடியுமென உத்தரவாதமளிப்பதாகவும் மௌலவி அப்துல் வாஜித் கூறினார்.

வாழைச்சேனையில் பஸ் நிலையம் அமைக்கும்போது இடம்பெற்ற துர்ப்பாக்கிய சம்பவத்தினையடுத்து கிரான், கொக்குவில், செங்கலடி ஆகிய இடங்களிலுள்ள பொதுச்சந்தைகளில் இனமுரண்பாட்டை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முயற்சிகளை மேற்கொண்டுவரும் சந்தர்ப்பவாத சக்திகளை தோற்கடிக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழ் - முஸ்லிம்

2007 ஆண்டிற்குப்பின்னர் நாட்டில் ஏற்பட்ட சுமுகமான சூழ்நிலை கடந்தகால போர்ச்சூழலினால் பாதிக்கப்பட்ட எமது மக்களை ஆற்றுப்படுத்தியுள்ளது. 1990 ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த காலகட்டம் போலவே மக்கள் ஒற்றுமையாக வாழநினைக்கிறார்கள். இந்த நிலையில் சிறுசிறு பிணக்குகளை கலவரமாக்கி இனமுரண்பாட்டினை ஏற்படுத்தி குளிர்காய்வதற்கு சில இனவாத மற்றும் சந்தர்ப்பவாத சக்திகள் முனைகின்றன. இதற்கு நாம் இடமளிக்கக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக பாதுகாப்பு தரப்பில் உயரதிகாரிகளுடன் சம்மேளனம் கலந்துபேசி சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம். எனினும் பொலிஸார் கடமையிலிருக்கும்போது அப்பொலிஸார் முன்னிலையில் சில குழுக்கள் விரும்பாத செயற்பாடுகளைச் செய்துள்ளதை அறியும்போது வேதனையாயுள்ளது. அவ்வாறான நிலையில்கூட சாதாரண தமிழ் வியாபாரிகள் அதனைத்தடுத்து நிறுத்துவற்கு முயற்சித்துள்ளதுடன் “வேண்டாத தடை உத்தரவை ஏற்றுக்கொள்ளவேண்டாம்: முஸ்லிம்களும் வியாபாரம் செய்ய வேண்டும்” என்று கேட்டுள்ளனர்.

ஆகவே இவ்விவகாரம் தொடர்பில் தமிழ் அரசியல் முக்கியஸ்தர்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

குறிப்பாக ஏறாவூர்ப் பிரதேசத்திற்கு தினமும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் சகோதரர்கள் தொழில் நிமித்தம் வருகின்றனர். அவர்கள் அன்றாட தொழிலாளிகள். அவர்களது வயிற்றில் மண்ணை அள்ளிப்போடமுடியாது.

அதேபோன்று மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச சந்தைகளிலும் இதர பிரதேசங்களிலும் முஸ்லிம்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதுண்டு. அவர்களுக்குள் கனிசமான புரிந்துணர்வு இருக்கும் நிலையில் இதனைக்குழப்புவதற்கு சில சக்திகள் களமிறங்கியுள்ளன. எனவே பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]