தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் புதிய கூட்டணி

தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் புதிய கூட்டணி தேர்தலில் களமிறங்கும், இந்த தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் பொது அமைப்புக்களும் தேர்தலில் போட்டியிடுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தற்கால அரசியல் மற்றும் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் தேசிய இனங்களை உதாசீனம் செய்கின்ற வகையிலும், தேசிய இனங்களின் உரிமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தான் வழிகாட்டல் குழுவின் அறிக்கை அமைந்துள்ளது.

தமிழ் மக்களினால் ஆதரவு வழங்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியலமைப்பிற்கு ஆதரவு அளித்துவரும் நிலையில், அவற்றினை சீர் செய்ய தமிழ் மக்கள் பேரவைக்கு பொறுப்பு இருக்கின்றது. அரசியலமைப்பு நிராகரிக்க வேண்டிய விடயங்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று உள்ளுராட்சி தேர்தலை கருத்துக்கணிப்பாக ஏற்று அவற்றினை விளங்கிக்கொண்டு, மக்களுக்கு ஆழமான அரசியல் நிலமைகளைக்கொண்டு செல்ல வேண்டும்.

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் பேரவை அரசியலில் இறங்கப்போவதில்லை என்றாலும் கூட தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் ஓரு கூட்டணி ஒன்று தேர்தலில் போட்டியிட வேண்டும்.

இந்த கூட்டணியில் தமிழ் தேசிய மக்கள் முண்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப் உட்பட பொது அமைப்புக்களும் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளன.

இன்று தமிழ் இனம் நடுத்தெருவிற்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், நாம் தேர்ந்தெடுத்த தமிழ் அரசியல் கட்சிகள் தமது பணியை சரியான முறையில் செய்யாதமையினால், மக்கள் நடுத்தெருவிற்கு வந்திருக்கின்றார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவங்கள் செய்த அநியாயங்கள் அம்பலமாகியுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்யும் மிக மோசமான அரசியல் மோசடியை மக்கள் நிராகரித்திடுவார்களோ என்ற அச்சத்தில் தமிழ் மக்களுக்குச் செய்கின்ற துரோகத்தினை செய்து முடிக்க முடியாத நிலமை தற்போது வந்திருக்கின்றது என்பதனை உணர்ந்து, இறுதிக்கட்டத்தில் நாமும் திருந்தி வருகின்றோம் என்பது போன்ற பல கருத்துக்களை முன்வைக்கின்றனர். ஆவ்வாறான கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ் மக்களுக்கு செய்த மோசமான அரசியலுக்கு நேர்மையான அரசியலை செய்ய முடியாது. இவ்வாறான கருத்துக்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் பேரவைக்கு அழுத்தமாக தெரிவித்துள்ளோம். அந்தவகையில், தமிழ் மக்களை மோசமான அரசியலில் இருந்து காப்பாற்ற மாற்று தலைமை ஒன்றினை உருவாக்குவதற்காக புதிய கூட்டணி ஒன்றினை விரைவில் உருவாக்கி அதன் ஊடாக தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுத்துச் செல்வோம் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]