வடக்கில் 27ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு அழைப்புவிடும் தமிழ் மக்கள் பேரவை

தமிழ் மக்கள் பேரவை வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வைத்தியர் லக்ஸ்மன் தலைமையில் திருகோணமலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் மற்றும் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு நீதி கோரும் வகையில்இந்த பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இங்கு உரையாற்றிய வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன்,

தமிழ் மக்களுக்கு இதுவரை காலம் விழிப்புணர்வை ஊட்டி வந்துள்ள நிலையில் தமிழ் மக்களுடன் இணைந்து நாட்டில் வாழப்போகும் சிங்கள மக்களுக்கு தமிழ் மக்கள் பேரவையின் கருத்துக்கள், கரிசனைகள், கவலைகள் சென்றடையவில்லை.

தெற்கில் தமிழ் மக்களின் நிலை அறிய, எமது கலை அறிய, எமது கவலையில் பங்கு கொள்ள ஒரு ஆர்வம் ஏற்பட்டு வருகின்றது. இதுவரை காலமும் இன ரீதியான முறுகல்கள் பொருளாதாரத்தைச் சீரழித்துள்ளமை சிங்கள மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உண்மை நிலையை ஊக்கமுடன் செயற்பட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் சிங்கள மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஒரு ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டால் நாடு ஏற்றுக்கொள்ளாது என்ற ஆதங்கமும் அவர்களுக்கு காணப்படுகின்றது.

இதனால் மக்கள் சக்தியுடன் இணைந்து சிங்கள மக்களுக்குச் சென்றடையும் விதத்தில் எமது கவலைகளை, கரிசனைகளை, கட்டாய தேவைகளை எடுத்துரைக்க வேண்டிய ஒரு கட்டம் பரிணமித்துள்ளது.

தமிழ் மக்களின் கருத்துக்களை அறிய ஆர்வமாக சிங்கள மக்கள் இருந்தாலும் சிங்கள ஊடக உரித்தாளர்களை அல்லது ஆசிரியர்களை கொண்ட ஆங்கில நாளேடுகள் எமது கருத்துக்களை சிங்கள மக்களிடம் சென்றடைய விடுவதில்லை.

தமிழ் மக்களுக்கான உரித்துக்கள் தரப்பட வேண்டியவை. ஆகவே, அரசாங்கம் தந்தே ஆகவேண்டும். என்ற கருத்திலேயே நாம் இதுவரை காலமும் பயணித்து வந்துள்ளோம்.

அதேவேளை, என்னை காண வரும் வெளிநாட்டவர்கள் இலங்கை அரசாங்கத்தால் மூளைச் சலவை செய்யப்பட்டே வருகின்றார்கள். அவர்களின் கேள்விகள் அதனைப் பிரதிபலிக்கின்றன

எது எவ்வாறிருப்பினும் எங்கள் கொள்கைகளை, கேள்விகளுக்கான பதில்களை அரசாங்கம் உரைக்கும் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களுக்கான மாற்றுக் கருத்துக்களை உடனுக்குடன் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு அறிவிக்க முன்வர வேண்டும்.

தமிழ் மக்கள் பேரவை வெறுமனே உணர்ச்சி பூர்வமான தீவிரபோக்குடைய ஒரு அரசியல் அலகல்ல எதனையும் ஆறஅமர சிந்தித்து பதிலளிக்கக்கூடிய ஒரு பேரவையே என்று அவர்கள் அடையாளம் காணும் வகையில் எமது நடவடிக்கைகள் சிறக்கவேண்டும் என்றார்.