தமிழ் மக்கள் பேரவைக்குரிய யாப்பு விரைவில் தயாரிக்கப்படும்- வடக்கு முதல்வர்

தமிழ் மக்கள் பேரவைக்குரிய யாப்பு விரைவில் தயாரிக்கப்படவுள்ளதுடன், யாப்பு மிகவிரைவில் தயாரிக்கப்பட்டதன் பின்னர் இளைஞர் மற்றும் யுவதிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையின் கலந்தரையாடல் இன்று (26) யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் இணைத்தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

எமது நடவடிக்கைகளுக்குத் தீர்வாக இளைஞர்களையும் யுவதிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டுமென்ற கருத்தினை முன்னரே ஏற்றுக்கொண்டிருந்தோம். அதற்குரிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது. தமிழ் மக்கள் பேரவைக்கென ஒரு யாப்பு இதுவரையில் தயாரிக்கப்படவில்லை. அந்த யாப்பின் அடிப்படையில் ஏனைய நடவடிக்கைகளுக்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்று உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். யாப்பு உருவாக்குவது தொடர்பில் உடனடியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தில் இருந்தும் பலர் கலந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் பல பிரச்சினைகள் குறித்து எடுத்துக் கூறினார்கள். அவற்றிற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும், இதுவரை காலமும் மக்கள் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் அந்த பிரச்சினைக்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. அந்த செயற்பாடுகள் மனவருத்த்தினை தருவதாகவும் கூறியுள்ளார்கள்.

கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் பிரச்சினைக்குரிய நடவடிக்கைகள் வேறுவிதமாக இருக்கும். எனவே, அங்கிருந்து வரும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வர தீர்மானித்துள்ளோம்.

அரசியல் ரீதியாக எமது இளைஞர்கள் மத்தியில் எவ்வாறான விடயங்களை கொண்டு சேர்க்க வேண்டுமென்று சில செயற்பாடுகள் உள்ளன. காலாதி காலமாக தமிழ் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடகிழக்கு இணைப்பு மற்றும் சுயாட்சி ஆகியவை புலப்பட்டு வந்துள்ளன. ஆனபடியால், இவற்றின் முக்கியத்துவத்தினை பொது மக்களுக்கும், இளைஞர் யுவதிகளுக்கு எடுத்து இயம்ப வேண்டும். கொள்கைகள் ஒருவிதமாக இருக்க அவற்றினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தான் எமக்குள் பல பிரச்சினைகள் இருக்கின்றன. கொள்கைகளில் எமக்கு மாற்றம் இல்லை.

முரண்பாடுகள் இல்லை. அவற்றினை அடையலாமா அல்லது அடையா முடியாதா எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என்பது சம்பந்தமாக பிரச்சினைகள் இருக்கின்றன. .இவற்றினை அடையாளப்படுத்தி தமிழ் மக்கள் பேரவை என்ற முறையில் கொள்கைகளுக்கு முக்கிய இடம் அளித்து எமது நடவடிக்கைகளை எடுத்துச் செல்ல வேண்டும். மிக விரைவில் யாப்பு தயாரிக்கப்பட்டதன் பின்னர் ஏனைய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]