தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும் : மோடியிடம் சம்பந்தன் வலியுறுத்து

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த இந்தியப் பிரதமர் மோடி, நேற்று மாலை 5.55 மணியளவில் புறப்படுவதற்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தியதாவது,

அரசியலமைப்பு மாற்றம் சம்பந்தமான நடவடிக்கைகள் மிகவும் மெதுவாகவே இடம்பெறுகின்றன. 2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு வருமென்று எதிர்பார்த்திருந்தோம். இந்த வருடத்திற்குள்ளாவது ஒரு தீர்வு வரவேண்டும்.

வடக்கும் கிழக்கும் தமிழர்கள் பாரம்பரியமாக, பெரும்பான்மையாக வாழ்ந்த இடங்கள். இங்கு சமஷ்டி முறையிலான ஒரு நியாயமான தீர்வு அமைய வேண்டும்.

அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தமாக கூறப்போனால் ஒரு கையால் கொடுத்து விட்டு மறு கையால் எடுக்கும் நிலைமையையே காணமுடிகின்றது. ஆகவே, குறைந்தது இந்தியாவில் இருக்கக்கூடிய காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களாவது இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

காணாமல் போனவர்கள் விவகாரம், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவித்தல், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை, இளைஞர்களுக்கான வேலையில்லாப் பிரச்சினை என்பன தொடர்பாகவும் இரா.சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார்.

இதற்கு பதிலளித்த மோடி, இவை சம்பந்தமாக நாம் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திடம் கூறியிருக்கின்றோம். இலங்கை அரசாங்கம் மிகவும் மெதுவாகவே நகர்வதை நாங்கள் உணர்கின்றோம்.

இலங்கை அரசாங்கம் விடயத்தில் தாமதித்துக் கொண்டிருந்தால் அனைத்துலகம் அழுத்தங்களைக் கொடுக்கும். இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு பெரியளவில் உதவ இருக்கின்றோம். இது சம்பந்தமாக அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் விரிவாக பேச்சு நடத்தியுள்ளேன்.

மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசுமீது அழுத்தங்களைக் கொடுத்து அவற்றுக்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரசியலமைப்பு விவகாரத்தில் இரா.சம்பந்தனின் பொறுப்புணர்வான அணுகுமுறையை இந்தியா வரவேற்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]