தமிழ் மக்களாலும் சர்வதேசத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமையாகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு : அரியநேத்திரன்

தமிழ் மக்களாலும் சர்வதேசத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமையா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்து வருகின்றது என்று கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

அன்னை பூபதியின் 29ஆவது வருட நினைவுதினம் மட்டக்களப்பு, நாவலடியிலுள்ள அவரது கல்லறைக்கு அருகில் நேற்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தானாக வலிந்துவந்து தலைமைப் பதவியைத் தாருங்கள் என்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு தலைமை தாங்குகின்றோம் என்றும் கூறி வரவில்லை. ஜனநாயக ரீதியாக ஏறக்குறைய 9 தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். இதுவரையில் அசைக்கமுடியாத வகையில் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமையாகவும் அதற்கும் அப்பால் இலங்கை அரசாலும் சர்வதேசத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமையாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்து வருகின்றது.

தமிழ் மக்களாலும்

ஜனநாயக ரீதியாகக் காணப்படும் இந்தத் தலைமையானது தமிழ் மக்கள் தொடர்பாக இலங்கை அரசிற்கு எந்தக் கருத்தைச் சொல்கின்றதோ எந்தக் கருத்தை ஜனநாயக ரீதியாக சர்வதேசத்துக்கு சொல்கின்றதோ அந்தக் கருத்தையே இலங்கை அரசும் சர்வதேச நாடுகளும் கேட்கின்றன.

அதை விடுத்து, இனிமேலும் எவராவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை குறை கூறிக்கொண்டிருந்தால் அதைக் குறையாகக் கூறிக்கொண்டிருக்கலாமே தவிர எந்தத் தீர்வையும் அடைய முடியாது என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இலக்கை நோக்கிச் செல்ல வேண்டுமாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பின்னால் அனைவரும் அணிதிரள வேண்டும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]