யாழிற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி யின் நிகழ்வுகளை புறக்கணிக்கவும் – சிவில் அமைப்புக்கள்

யாழ்ப்பாணம், அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை பொருட்படுத்தாது யாழிற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதியின் நிகழ்வுகளை புறக்கணிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனையும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடமும் மற்றும் பொது மக்களிடமும் சிவில் அமைப்புக்களைச் சார்ந்த பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (12.10) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த தங்களுடைய வழக்குகள் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்து, அந்த வழக்குகள் மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்னும், கோரிக்கையை முன்வைத்து தமிழ் அரசியல் கைதிகள் மூவர் கடந்த 18 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றார்கள்.

ஒரு தீர்க்கமான முடிவெடுக்கும் அதிகாரமுடைய ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்த போதும், இதுவரை எந்தவொரு காத்திரமான நடவடிக்கையும் ஜனாதிபதியால் எடுக்கப்படவில்லை. ஆரசியல் கைதிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டிய பொறுப்பிலிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இதுவரை எந்தவொரு காத்திரமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதுடன், அரசாங்கத்தை உள்நாட்டிலும் சர்வதேசமட்டத்திலும் காப்பாற்றி வருகின்றதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இவ்வாறானதொரு சூழலில், தமிழ் அரசியல் கைதிகள் மூவரினதும் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதியின் மீதும் எதிர்கட்சித் தலைவர் மீதும் அழுத்தத்தை பிரயோகிக்கும் முகமாக இன்று (13.10) வெள்ளிக்கிழமை வடக்கு மாகாணம் தழுவிய வகையில் கதவடைப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அரசியல் கைதிகள் தங்களின் உயிர்களை பணயம் வைத்து போராடிவருகின்ற நிலையில், அவர்களது நியாயமான கோரிக்கைகளை பொருட்படுத்தாது, நாளை மறுதினம் (14.10) சனிக்கிழமை ஜனாதிபதியும் எதிர்கட்சித் தலைவரும் பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ளனர். இது தமிழ் மக்களுக்கு எந்தவகையிலும் ஏற்புடையது அல்ல என்பதுடன், வன்மையாக கண்டிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாது ஜனாதிபதியோ, எதிர்கட்சித் தலைவரோ வெறுமனே நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக வருகைதருவார்களாக இருந்தால், அவர்களுக்கு எதிராக காத்திரமான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு தமிழ் மக்கள் உள்ளனர்.

எனவே, அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை புறக்கணித்து ஜனாதிபதியும் சம்பந்தனும் (14.10) யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்வார்களாயின், அந்த நிகழ்வுகளை புறக்கணிக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோரிடம் சிவில் அமைப்பினர் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]