தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், உரிய அழுத்தம் பிரயோகிக்க வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகள்தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு உரிய அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கையொப்பமிட்டு,  எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் சமர்ப்பித்துள்ள கடிதத்தில்  இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கைத் தமிரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தின் முன்பாக அவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் உரிய கவனம் எடுத்து செயற்பட வேண்டும் என்றும் அவர்கள் தமது கடிதம்மூலம் கோரியுள்ளனர்.

வவுனியா நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள தமது வழக்குகளை வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றக் கூடாது என்றும், மரண தண்டனைக் கைதிகளுடன் தம்மை தடுத்து வைக்க கூடாது என்றும் வலியுறுத்தி தமது உறவினர்களான கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர.

தமது உறவுகளின் வழக்குகள் வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டால், தமிழ் மொழியை மட்டுமே அறிந்த அவர்கள், மொழி ரீதியான சிக்கல்களை எதிர்நோக்குவார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசியல் கைதிகள் முன்னெடுக்கும் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டம் காரணமாக அவர்களின் உடல் நிலை மோசமடைவதாகவும் அந்தக் கடித்தத்தின் ஊடாக உறவினர்கள், எதிர்க்கட்சித் தலைவரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உண்வு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரியுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகத்தினரும், உணவு தவிர்ப்பு போரட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாளை தினம்  போராட்டமொன்றில் ஈடுபட தீர்மானிததுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]