தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனைகளின்றி விடுதலை செய்ய வேண்டும் – சுரேஸ் பிரேமசந்திரன்

தமிழ் அரசியல் கைதிகளையும்

நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனைகளின்றி விடுதலை செய்ய வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மூவர் 13 ஆவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் அவர்கள் பற்றி ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இன்று யாழில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் அரசியல் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துக் கொண்டு அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இந்த கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே பிரேமசந்திரன் மேற்குறிப்பிட்ட கருத்தை கூறினார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தின் மோசமான சூழ்ச்சியின் காரணமாகவே அவர்கள் தொடர்ந்தும் பல இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்தார்.

எனவே இதற்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பாரிய ஆர்பாட்டம் ஒன்றை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.