தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து முக்கிய தீர்மானம்

தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வற்புறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டிருந்த நிர்வாக முடக்கல் போராட்டத்தில் நேற்று (03) முக முக்கியமான முடிவொன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று கைதிகளின் போராட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரக் கோருவதென தீர்மானிக்கப்பட்டது.

அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் தொடர்ந்து சாத்தியமான வழிகளில் போராட்டங்களை முன்னெடுப்பதெனவும் மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

இதே வேளை, நேற்றைய தினம் தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வற்புறுத்தும் போராட்டத்தின் அடுத்த கட்டம் பற்றிக் கலந்துரையாடுவதற்கென தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடலில் இலங்கை தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எவரும் கலந்து கொள்ளவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சிவசக்தி ஆனந்தன், டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கே.சர்வேஸ்வரன், வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் மாணவர்களின் இந்த முயற்சிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

மாணவர்களுடன் அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளின் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முடித்து வைக்கக் கோரவுள்ளதாகவும் உத்தரவாதமளித்துள்ளனர்.

கலந்து கொள்ளத் தவறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பகிரங்கமாகக் கண்டனங்களை வெளியிட்ட மாணவர்கள், தமிழ்த் தலைவர்கள் வரலாற்றுத் தவறிழைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]