தமிழ்பேசும் சமூகம் ஓரணியில் பயணிக்கவேண்டிய காலம் இது : ஹக்கீம் சுட்டிக்காட்டு

தமிழ்பேசும் சமூகம் ஓரணியில் பயணிக்கவேண்டிய காலம் இது. வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் தமிழ்பேசும் சமூகங்கள் என்ற அடிப்படையில் அரசியல் ரீதியாக ஒன்றித்துப் பயணிக்கவேண்டிய அவசியம் மிகத் தெளிவாக உணரப்பட்டுள்ளது என நகர அபிவிருத்தி நீர்வழங்கல் வீதி அபிவிருத்தி வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் சுமார் 200மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட காபட் வீதிகள் நேற்றுக் காலை திறந்துவைக்கப்பட்டன.

நகர அபிவிருத்தி நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் 24கிலோமீற்றர் நீளம் கொண்ட வீதிகள் காபட் வீதிகளாக அமைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நகர அபிவிருத்தி நீர்வழங்கல் வீதி அபிவிருத்தி வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் கலந்துகொண்டதுடன் விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், அலிசாகீர் மௌலானா மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், மா.நடராஜா, இரா.துரைரெட்ணம், ஞா.கிருஷ்ணபிள்ளை உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் உரையாற்றும்போது,

“இலங்கையில் வாழும் தமிழர்களின் கலை, கலாசார, ஆன்மீக கேந்திரநிலையமாக மட்டக்களப்பு மாநகரம் என்பது மிகையாகாது. அவ்வாறான மாநகரசபை வீதிகள் குன்றும்குழியுமாக இருப்பதாக எனது அமைச்சின் முன்னர் மேலதிக செயலாளராக கடமையாற்றிய சுரேஷ் கொண்டுவந்தபோது அதற்கான நிதியை ஒதுக்கீடுசெய்தேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கிழக்கின் ஆட்சியின் பங்குதாரர்கள் என்ற அந்தஸ்து நிரந்தர அந்தஸ்தாக இருக்கவேண்டும் என்று விரும்புபவர்கள் நாங்கள். அதன்மூலமே நாங்கள் பல விடயங்களை சாதிக்கமுடியும்.

தமிழ்பேசும்

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் தமிழ்பேசும் சமூகங்கள் என்ற அடிப்படையில் அரசியல் ரீதியாக ஒன்றித்துப் பயணிக்கவேண்டிய அவசியம் மிகத் தெளிவாக உணரப்பட்ட காலத்தில் நாங்கள் வாழ்கின்றோம்.

கடந்த கால பூதங்கள் மீண்டும் கிளம்புகின்ற காலத்தில் சட்டம், ஒழுங்கு விடயத்தில் தீவிர சக்திகளுக்கு ஆட்சியாளர்கள் அச்சம்கொள்கின்றார்களா என்று கேட்கத் தோன்றும் அளவுக்கு சில சம்பவங்கள் அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் நாங்கள் இன்னும் இறுக்கமாக ஒன்றுபடவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்” – என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]