தமிழ்நாட்டில் இருந்து கணித, விஞ்ஞான பட்டதாரிகளை அழைத்துவர நடவடிக்கை : இராதாகிருஸ்ணன்

மலையகத்தில் கணித, விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களின் குறைபாடுகளை நிவர்த்திச் செய்வதற்கு நாம் பல முயற்சிகளை எடுத்தாலும் அதற்கு பல முட்டுக்கட்டைகள் வருகின்றது.மேலும், எங்களிடமும் கணித, விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்கள் இல்லை. எனவே, இதற்கு ஒரு தீர்வாக தமிழ்நாட்டில் இருந்து ஆசிரியர்களைக் கொண்டு வருவதற்கு தற்பொழுது இந்திய தூதரகத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மீபேயில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் தேசிய கல்வி நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற பெருந்தோட்ட பாடசாலைகள் சம்பந்தமான கலந்துரையாடல் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது,

மலையகத்தில் 25 கணித, விஞ்ஞான பாடசாலைகள் உள்ளன. மேலும் 35 பாடசாலைகள் அபிவிருத்திச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால், எங்களுக்கு வளங்களைப் பெற்றுக்கொடுக்க முடியும்.

குறிப்பாக பாடசாலைகளின் கட்டட வசதி மலசலகூட வசதிகள்,நீர் வசதிகள் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் போன்ற விடயங்களை பூர்த்தி செய்ய முடியும். கணித, விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களின் குறைபாடுகளை தீர்ப்பதற்கு நாம் பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் அதனை நிறைவுசெய்ய முடியவில்லை.

நாங்கள் வட, கிழக்கில் இருந்து ஆசிரியர்களைக் கொண்டுவருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டோம்.ஆனால், அது முடியாமல் போய்விட்டது. ஓய்வுபெற்ற ஆசிரியர்களை நியமிக்க ஏற்பாடு செய்தோம் அதுவும் முடியாமல் போய்விட்டது. எனவே, இதற்கு என்ன தீர்வு என்று யோசித்த போது அண்மையில் நான் இது தொடர்பாக இந்திய தூதரகத்திடம் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினேன்.

 தமிழ்நாட்டில்

இந்தக் கலந்துரையாடலின் போது என்னுடைய கோரிக்கையை அதாவது தமிழ்நாட்டில் இருந்து கணித, விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களைப் பெற்றுத்தர வேண்டுமென அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அதனை செய்ய முடியுமென உறுதியளித்தனர்.

இந்த விடயம் தொடர்பாக முறையாக மகஜர் ஒன்றை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டார்கள். நாம் இந்த மகஜரை தற்பொழுது தயாரித்து வருகின்றோம். மிக விரைவில் இதனை நான் இந்திய தூதுவரிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.

அந்த ஆசிரியர்களை பெற்றேனும் எமது இந்த பிரச்சினைககுத் தீர்வுகாண வேண்டும். ஏனெனில் நாம் இதனை பேசிக்கொண்டு இருப்பதால் எந்தவிதமான பயனும் இல்லை. இந்திய ஆசிரியர்களின் வருகையின் மூலமாக எமது இந்த 25 பாடசாலைளையும் அபிவிருத்தி செய்ய முடியும்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]