தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் விலகுவதாயின் உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும்

ஈ.பி.ஆர்.எல்.எவ். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்று. இந்த கட்சி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனிவழியில் சென்று கூட்டமைப்பிலிருந்து விலகிய கட்சிகளுடனோ அல்லது கூட்டமைப்புக்கு எதிராக முளைத்த அமைப்புகளுடனோ இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதெனில், அதனை எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.சுமந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியினர் எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தால்தான் அவர்களின் கருத்துக்கு எம்மால் தகுந்த பதிலைத் தெரிவிக்கமுடியும் என்றும் சம்பந்தனும், சுமந்திரனும் கூறியுள்ளனர்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை வடக்கு, கிழக்கில் சந்திப்பதற்காகத் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் பொது அமைப்புகள், பிற கட்சிகளை இணைத்து பொதுக் கூட்டமைப்பு ஒன்று உருவாக்குவது எனத் தமிழ் மக்கள் பேரவை தீர்மானித்திருக்கின்றது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோரிடம் கொழும்பு ஊடகம் ஒன்று வினவியபோதே அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.