தமிழர்களுக்கு உரிய அந்தஸ்த்து கிடைப்பதில்லை: மனோ கணேசன் குற்றச்சாட்டு

தமிழர்களின் வாக்குகளை பயன்படுத்திகொள்ளும் அரசாங்கங்கள், அவர்களுக்கு உரிய அந்தஸ்த்தை தருவதில்லை என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சரும், முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

த.மனோகரனின் ‘உள்ளதைச் சொல்கின்றேன் நல்லதைச் சொல்கின்றேன்’ நூல் வெளியீடு கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றும் போதே அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘அரசியலில் மட்டுமன்றி சுமார் 70 அரச நிறுவனங்கள் ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்கள் வசம் உள்ளநிலையில், அவை மூலம் கிடைக்கும் சேவைகளும் போதாது என முஸ்லிம் மக்கள் அவர்களை குறை கூறி வருகின்றனர்.

இவர்களை பார்த்து தமிழர்கள் பாடம் படிக்க வேண்டும். ஏன் என்றால் முஸ்லிம் மக்களை விட தமிழ் மக்களிடமே பெரும்பான்மை வாக்குகள் காணப்படுகின்றது. இருப்பினும் என்ன பயன்? தமிழர்களை பொறுத்தவரையில், 3 அமைச்சரவை, 1 இராஜாங்க, 3 பிரதி அமைச்சர்கள் தான் இருக்கிறோம்.

தமிழர்களின் வாக்குகளை பயன்படுத்திகொள்ளும் அரசாங்கங்கள், அவர்களுக்கான உரிய அந்தஸ்த்தை தருவதில்லை. அந்தவகையில் இதற்கு முன் இருந்த அரசாங்கங்களும் தரவில்லை. இந்த அரசாங்கமும் தரவில்லை.

இதனால், தமிழர்களுக்கு, பிரத்தியேக சக்தி என்ற அமைச்சரவை நிறைவேற்று அதிகாரம் போதுமானளவு கிடைப்பதில்லை. இதனால்தான், தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெறும்படி நான் பகிரங்கமாக அழைப்பு விடுத்தேன். ஒரு சிலர், எனது அழைப்பை விமர்சனம் செய்த போதும், இன்னும் ஒரு சிலர் அதிலுள்ள நியாயத்தை புரிந்துக்கொண்டார்கள்.

தமிழர்களுக்கு அரசியல் தீர்வும் இல்லை. அபிவிருத்தியும் இல்லை. இதுதான் இன்று தமிழர்களின் நிலைமையா? என்று நான் கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது?

இன்று இவை பற்றி யாராவது பேச வேண்டும். அதனால்தான், நான் இன்று பகிரங்கமாக பேசுகிறேன். இதன் மூலம் இது பற்றிய நாடு தழுவிய ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்த நான் விரும்புகிறேன். எனவே தான் அரசுக்குள்ளே இருந்தபடியே முடிந்தளவான உள்போராட்டங்களை செய்கிறேன்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]