தமிழர்களின் இறைமை பாதுகாக்கப்படவேண்டும் -மட்டக்களப்பில் எதிர்க்கட்சி தலைவர்

தேசிய பிரச்சினைக்கு ஒரு தீர்வினை காணவேண்டும் என்ற அடிப்படையில்தான் பழைய அரசாங்கத்தினை விரட்டி புதிய அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு உதவினோம்.அதனை நிiவேற்றுவதாக இருந்தால் புதிய அரசாங்கத்தினை பகைத்து அதனை நாங்கள் நிறைவேற்றமுடியாது.புதிய அரசாங்கத்திற்கு ஒத்துழைக்கவேண்டிய தேவையிருக்கின்றது என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய பொதுச்சந்தை கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், மணமுனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபாரன்,தமிழரசுக்கட்சி பொதுச்செயலாளர் கி.துiராஜசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்கட்சி தலைவர்,

எதிர்காலத்தில் உள்ளுராட்சிமன்றங்கள் சட்டங்களை நிறைவேற்றி மக்களுக்கு சேவையினை வழங்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன.உள்ளுராட்சிமன்றங்கள் பாரிய சேவையினையாற்றும் அமைப்பு என்பதை நாங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் அந்த மக்களின் தேவையினை நிறைவேற்ற கூடிய முயற்சிகளை எடுக்கவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டம் மிகமுக்கியமான மாவட்டமாகும்.வடகிழக்கில் ஒரு முக்கியமான மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது.

அரசியலில் எப்போதும் பேதங்கள் இருக்கும்,அரசியலில் எப்போதும் கருத்துவேறுபாடுகள் இருக்கும்.என்னவிதமான வேறுபாடுகள்,கருத்துமுரண்பாடுகள் இருந்தாலும் எமது மக்களுக்கு உண்மையாக சேவையாற்றுவதாக இருந்தால் நாங்கள் ஒன்றுபட்டு எங்களுக்குள்ள பேதமைகளை பயன்படுத்தாமல் அவற்றினை மறந்து மக்கள் தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய சேவைகளை ஒன்றுபட்டு மேற்கொள்வதன் மூலமே மக்களுக்கு உண்மையான சேவையினை வழங்கமுடியும்.

தமிழ் மக்கள் பல்வேறு வகையான துன்பங்களையும் கஸ்டங்களையும் எதிர்நோக்கியுள்ளனர்.எமது பிரதேசத்தில் 30வருடங்களாக யுத்தம் நடைபெற்றது.அதுபாரிய அழிவினை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் மக்கள் இன்னும் சாதாரணநிலைக்கு திரும்பவில்லை.இன்னும் பல கஸ்டங்களை எதிர்நோக்குகின்றனர்.காணாமல்போனவர்கள் பிரச்சினை,அரசியல் கைதிகள் பிரச்சினை,காணி தொடர்பான பிரச்சினை,மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினை,

தொழில்வாய்ப்பு தொடர்பான பிரச்சினை,அபிவிருத்தி தொடர்பான பிரச்சினை இவ்வாறு பல பிரச்சினைகளை தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.இது தவிர்க்கமுடியாதது.இது யுத்ததின் விளைவுகள்.இதனை காலப்போக்கில் நாங்கள் தீர்க்கவேண்டும்,தீர்த்துக்கொண்டுவருகின்றோம்.

பல விடயங்கள் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.ஆட்சிமாற்றம் ஊடாக தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி ஆளவேண்டும் என்று நினைத்த ஒரு அரசாங்கத்தினை ஜனாதிபதியை பதவில் இருந்து விரட்டி இன்று வேறுவிதமாக சிந்திக்ககூடிய அரசாங்கத்தினை இன்று நாங்கள் அமைத்துள்ளோம்.ஆனால் அவரின் சேவைகளில் பல குறைபாடுகள் உள்ளது.அது நிறைவுசெய்யப்படவேண்டும்.இருக்கின்ற குறைகள் நீக்கப்படவேண்டும்.மக்களுக்கு தேவையானவை வழங்கப்படவேண்டும்.அது அவர்களின் உரிமை.

இன்று அபிவிருத்திகள் தொடர்பில் பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன.நாங்கள் இந்த அரசாங்கத்தினை ஆதரிக்கின்றோம்.சில முக்கியமான விடயங்களுக்கான நாங்கள் அந்த ஆதரவினை வழங்குகின்றோம்.ஒரு ஆட்சிமாற்றத்தினை ஏற்படுத்தி இந்த அரசாங்கத்தினை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்கு நாங்கள் ஒரு பாரிய பங்களிப்பு செய்தோம்.ஓரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே அதனை வழங்கினோம்.இந்த நாட்டில் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து அரசாங்கத்தினை அமைத்ததன் காரணமாக தேசிய பிரச்சினைக்கு ஒரு தீர்வினை காணவேண்டும் என்ற அடிப்படையில்தான் பழைய அரசாங்கத்தினை விரட்டி புதிய அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு உதவினோம்.

அதனை நிறைவேற்றுவதாக இருந்தால் புதிய அரசாங்கத்தினை பகைத்து அதனை நாங்கள் நிறைவேற்றமுடியாது.புதிய அரசாங்கத்திற்கு ஒத்துழைக்கவேண்டிய தேவையிருக்கின்றது.ஆனால் அனைத்து விடயங்களுக்கும் ஒத்துழைக்கமாட்டோம்.

எமது மக்களின் இறைமை மதிக்கப்படவேண்டும்.இறைமையென்பது ஆட்சியதிகாரங்களை பயன்படுத்துவது,ஜனநாயகத்தினை பயன்படுத்துவது.இறைமையின் முக்கிய அம்சம் ஆட்சியதிகாரங்களை பயன்படுத்துவது.தமிழ் மக்களும் தமிழ் பேசும் மக்களும் தாங்கள் வாழும் பகுதிகள் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும்.

அபிவிருத்திகளை நாங்கள் வரவேற்கின்றோம்.அந்த அபிவிருத்திகள் தமிழ் மக்களின் இறைமையின் மூலமாக பெறுவதற்கே நாங்கள் விரும்புகின்றோம். எங்களால் தெரிவுசெய்யப்படும் முதலமைச்சர்கள், பிரதிநிதிகள், அமைச்சர்கள் அந்த அதிகாரங்களை பயன்படுத்தி மக்களுக்கு தேவையானவற்றை அடையவேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம்.இந்த கருத்தினை சிலரால் புரிந்துகொள்ளமுடியாத நிலையிருக்கின்றது.இந்த கருத்தினை புரிந்துகொள்வதற்கு ஒரு அரசியல் சரித்திரம் தேவை.அது எங்களிடம் உள்ளது.

தமிழர்களின் இறைமை

நாங்கள் இந்த நாட்டில் நீண்டகாலமாக இருந்துவருகின்றோம்.எங்களுக்கு ஒருபண்பாடு,சரித்திரம்,கலாசாரம் உண்டும்.நாடு சுதந்திரமடைந்த பின்னர் ஒரு குறிப்பிட்ட கொள்கையினை முன்வைத்து அரசியல் சாசனங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட அந்த ஆட்சி அதிகாரங்கள் பறிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்துள்ளோம்.

நாங்கள் அபிவிருத்திகளையும் அதிகாரங்களையும் பெறுவதாக இருந்தால் அரசியலமைப்பில் மாற்றங்கள் வரவேண்டும்,புதிய அரசியல்சாசனம் உருவாக்கப்படவேண்டும்.ஆட்சி அதிகாரங்கள் எங்களது கைகளுக்கு வரவேண்டும்.அதன்மூலமாக எமது இறைமை மதிக்கப்படவேண்டும்,எமது இறைமை மதிக்கப்படுவதன் ஊடாக எமது உள்ளக சுயநிர்ணய உரிமை மதிக்கப்படவேண்டும்.அப்போதுதான் தமிழ் மக்கள் சுயமரியாதையுடைய சுயாதீனமாக வாழக்கூடிய மக்களாக கருதப்படுவோம் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]