தமிழருக்கு ‘சமஷ்டி’யை வழங்கி நாட்டை இரண்டாகப் பிரிக்கச் சதித்திட்டம்

ஒற்றையாட்சி என்ற பெயரில் தமிழருக்கு சமஷ்டியை வழங்கி அதனூடாக நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கு தேசிய அரசில் உள்ள சிலர் சதி செய்கின்றனர் என்றும், இது இரண்டு பிரதான கட்சிகளுக்கும் மக்கள் வழங்கிய ஆணையை மீறும் செயலாகும் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள ஒரு சிலர் சமஷ்டியை ஆதரிக்கின்ற போதிலும்கூட, ஜே.ஆர்.ஜெயவர்தனவினதும் டீ.எஸ்.சேனநாயக்கவினதும் பரம்பரையில் வந்தவர்கள் ஒற்றையாட்சியையே ஆதரிக்கின்றனர். அந்தக் கட்சியில் உள்ள பெரும்பான்மையினரின் நிலைப்பாடு ஒற்றையாட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான்.

ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதற்காகவே மக்கள் இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் வாக்களித்தனர். ஆனால், ஒற்றையாட்சி என்ற பெயரில் தமிழருக்கு சமஷ்டியை வழங்கி அதனூடாக நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கு இந்தத் தேசிய அரசில் உள்ள சிலர் சதி செய்கின்றனர். மஹிந்த ஆட்சியிலும் இவ்வாறானவர்கள் இருந்தனர். திஸ்ஸ விதாரணவின் அறிக்கை இதற்கு நல்ல உதாரணம். மக்கள் ஆணையை ஒருபோதும் மீறமுடியாது.

உண்மையில், இந்த இரண்டு பிரதான கட்சிகளும் ஆரம்பத்தில் சமஷ்டி என்ற நிலைப்பாட்டில்தான் இருந்தன. நாங்கள்தான் இவர்களை ஒற்றையாட்சி என்ற நிலைப்பாட்டுக்குக் கொண்டு வந்தோம்.

நாம் ஒற்றையாட்சி பற்றிப் பேசியபோது சந்திரிகாவும் மஹிந்தவும் சமஷ்டி நிலைப்பாட்டில் இருந்தனர். கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்தார். விமல் வீரவன்ஸ வேறொரு சிந்தனையில் மூழ்கி இருந்தார்.

2005இல் மஹிந்த ஆட்சிக்கு வந்தபோது அவர் விடுதலைப்புலிகளுடன் யுத்தம் செய்வதற்கு இருக்கவில்லை. பேச்சு நடத்தவே திட்டமிட்டார். டிரான் அலசின் ஊடாக புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்தினார். ஜெனிவாவில் விடுதலைப்புலிகளுடன் பேச்சைத் தொடங்கினார். ஆனால், நாம்தான் மஹிந்தவை யுத்தத்துக்குத் தள்ளினோம்.

இவ்வாறு கஷ்டப்பட்டு காப்பற்றிய இந்த நாட்டை சமஷ்டித் தீர்வின் ஊடாக மீண்டும் விடுதலைப்புலிகளிடம் ஒப்படைப்பதற்கு இந்த அரசில் உள்ளவர்கள் முயற்சிப்பது கவலைக்குரிய விடயம். இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்” – என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]