தமிழகத்தில் பண்டிக்காய்ச்சல்

சென்னை, வேலூர் ,திருச்சி ,கோவை ஆகிய மாவட்டங்களில் பண்டிக்காய்ச்சல் தொடர்பில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

போர்க்கால அடிப்படையில் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. வழமையாக தமிழ்நாட்டில் குளிர்கால பகுதியில் வைரஸ் தாக்கம் இடம்பெறுவது வழமை. இருப்பினும் அங்கு பல்வேறு இடங்களில் பண்டிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 5 க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆந்திரா கர்நாடகா கேரளா மாநிலங்களிலும் பண்டிக்காய்ச்சல் பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிக்காய்ச்சல் நோய் பருவகாலங்களில் ஏற்படும் சாதாரண காய்ச்சல் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருப்பதாக தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை பணிப்பாளர் குழந்தைச்சாமி தெரிவித்துள்ளார்.

கைககளை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் பண்டிக்காய்ச்சல் பரவுவதிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துக்கொள்கின்றனர் .
ஒருவர் தும்முதல் மூலம் அல்லது இருமுவதன் மூலம் பண்டிக்காய்ச்சல் வைரஸ் நேரடியாக 20 சதவீதம் தாக்குகின்றன. ஆனால் 80 சதவீதம் கைகளினாலேயே இந்த நோய் பரவுவதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய மாடிப்படிகள் கைப்பிடிகள் பொருட்கள் என்பனவற்றை பிறர் பயன்படுத்துவதன் மூலம் இந்த நோய் பரவுகின்றது. எனவே அடிக்கடி கைகளை கழுவுவது அவசியமாகும்.

நீரிழிவு நோய் , உயர் இரத்தழுத்தம் உள்ளிட்ட வேறு நோய் பாதிப்புள்ளவர்களை எளிதில் தாக்கிவிடும்.

தமிழகத்தில் இந்த நோயினால் உயிரிழந்த 5 பேரில் 4 பேருக்கு பிற நோய் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் பிற நோய்கள் இருப்போர் அவ்வப்போது தமது தேகஆரோக்கியத்தை பரிசோதித்து முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.