தன்னுடைய உடலை அடக்கம் செய்ய வேண்டாம், மருத்துவ துறைக்கு கொடுத்துவிடுங்கள் – டேவிட் குட்ஆல்!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானி டேவிட் குட்ஆல், சுவிட்சர்லாந்து நாட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 104 வயதான டேவிட் தன்னுடைய வாழ்வை முடித்துக் கொள்வதற்காகவே ஆஸ்திரேலியாவில் இருந்து சுவிட்சர்லாந்து சென்றார்.

பிரிட்டன் வாழ் ஆஸ்திரேலியரான டேவிட் ஆஸ்திரேலியாவில் குறிப்பிடத்தக்க அறிவியல் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். சுற்றுச் சூழல் குறித்து ஆய்வு மேற்கொண்டு 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை தொகுத்துள்ளார். தன்னுடைய நூறாவது வயது வரை அவர் இடைவிடாமல் பணி செய்து வந்துள்ளார். 1979ம் ஆண்டே முழுநேர பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட போதும், களப்பணியில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக அவர் உடல் நலம் குன்றி இருந்தார். நோய் என்று எதுவும் இல்லை முதுமையின் காரணமாகவே இந்தப் பிரச்னை அவருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் எதுவும் செய்ய முடியாத, வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்கு வந்துவிட்டார். அதனால், தன்னுடைய வாழ்வை முடித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டார். அதனால், உயிரை மாய்த்துக் கொள்ள அனுமதி அளிக்குமாறு ஆஸ்திரேலிய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், ஆஸ்திரேலிய சட்டப்படி உயிரை ஒருவர் மாய்த்துக் கொள்ள அனுமதி அளிக்க முடியாது. &nbsp;</p>

அதனால், ஆஸ்திரேலியாவை விட்டு வேறுநாட்டில் சென்று உயிரை விடலாம் என்று முடிவு செய்துள்ளார். அதன்படி, சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டில் 1942 முதல் தற்கொலைக்கு சட்டபூர்வமான அனுமதி உண்டு. ஆனால், மருத்துவ ரீதியாக எதுவும் செய்ய முடியாத நிலைக்கு வந்துவிட்டார் என்ற சான்றிதழ் வேண்டும். சுவிட்சர்லாந்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதி பெற்று அந்நாட்டிற்கு கடந்த வாரம் சென்றுள்ளார்.

இறப்பது ஒருநாள் முன்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டேவிட், நான் செயல் இழந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆஸ்திரேலியாவிலே மரணிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். ஆனால் அது நிறைவேறவில்லை. சுவிட்சர்லாந்தில் உள்ள மருத்துவமனையில் என்னை நல்ல முறையில் கவனித்துக் கொள்கிறார்கள். என்னுடைய வயதுடையவர்கள், வாழ்வை முடித்துக் கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது என்று எண்ணும் போது அவர்கள் சுதந்திரமாக மரணிக்க வேண்டும் என்று கூறினார்.

அதனையடுத்து, நேற்று மதியம் 12.30 மணிக்கு டேவிட் குட் ஆல் மரணித்ததாக அறிவிக்கப்பட்டது. அவர் மரணம் அடைவதற்கு முன்பாகவும் புன்னகையுடனே காணப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறினார்கள். கடைசி தருணத்திலும் பீத்தோவனின் 9வது சிம்பொனியை கேட்டுள்ளார். தனக்கு பிடித்த மீன், சைனிஸ் கேக், சிப்ஸ் போன்ற உணவுகளை கடைசியாக உட்கொண்டார். மரணித்திலும் தான் ஒரு விஞ்ஞானி என்பதை அவர் நிரூபித்தார். தன்னுடைய உடலை அடக்கம் செய்ய வேண்டாம், மருத்துவ துறைக்கு கொடுத்துவிடுங்கள் என்ற கோரிக்கையை முன் கூட்டியே வைத்துவிட்டு சென்றுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]