தனுஷ் சிங்கத்தின் பால், தானு ஒரு தங்கக் கிண்ணம்

கலைப்புலி எஸ் தானு அவர்களின் வி.கிரியேஷன்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் சேர்ந்து தயாரித்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான படம் வேலையில்லா பட்டதாரி – 2.

வேலையில்லா பட்டதாரி படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், கஜோல்,அமலா பால், சமுத்திரக்கனி மற்றும்  விவேக் நடித்துள்ளனர். கடந்த 11 ஆம் தேதி வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. மேலும் இந்த படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷன்கள் இம்மாதம் 18 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இன்று இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் நடிகர் தனுஷ், விவேக், இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்துடன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு அவர்களும் கலந்து கொண்டார்.

படத்தின் கதாநாயகன் தனுஷ் பேசிய போது, ” படத்தின் கதையை இயக்குனரிடம் கொடுக்கும் பொழுதே வி.ஐ.பி-யின் முதல் பாகம் அளவிற்கு இருக்காது என்பதை சொல்லியே தான் கொடுத்தேன். இருப்பினும் படத்தின் இந்த மிகப்பெரிய வெற்றி மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. படத்திலிருக்கும் ஸ்ட்ராங்க் ஆன கதையே படம் வெற்றி பெற காரணம். பாஸிட்டிவிட்டிக்கு என்றைக்குமே ஒரு எனர்ஜி இருக்கும், அதுதான் இந்தப் படத்தில் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

ஒரு தாய் இல்லாத வீட்டில் ஒரு தந்தை தாயகவும் மகனுக்கு நல்ல தோழனாகவும் இருக்க வேண்டும், அதே போல படத்தின் இறுதியில் வில்லியாக வரும் பெண்  தோற்பது தான் வழக்கமான கிளைமாக்ஸ், ஆனால் அப்படி இருக்கக் கூடாது ஆண், பெண் இருவருமே சமம் என்று கருத்தினை வலியுறுத்திதான் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வி.ஐ.பி-2 படத்திற்கு வட இந்தியாவில் 1600 தியேட்டர்கள் புக் ஆகியுள்ளது. கண்டிப்பாக ஹிந்தியிலும் நல்ல வெற்றி பெறும் என்று நம்புகிறேன். வி.ஐ.பி-3 ஆம் பாகமும் கண்டிப்பாக உருவாகும், கண்டிப்பாக அந்தப் படம் இதை விட நல்ல வரவேற்பை பெறும்,”என்று கூறினார்.

நடிகர் விவேக் அவர்கள், “தானு சாரிடம் ஒரு இன்டியூஷன் இருக்கிறது. ஏனெனில் வளர்ந்து  வருகின்ற கதாநாயகனாக இருந்த ரஜினிகாந்த் அவர்களை அப்போதே அவர் சூப்பர்ஸ்டார் என்று இனம் கண்டவர். இப்போது அவருடைய ஆசிர்வாதமான கரங்கள் தனுஷிற்கு கிடைத்துள்ளது. மேலும் டாப் 10 ஹீரோக்களில் தனுஷ் அவர்கள் இருப்பது பெருமையாக உள்ளது. வைரமுத்து அவர்கள் ஒரு பாடலில் சொன்னது போல் “சிங்கத்தின் பாலாக இருந்தால் அதை தங்க கிண்ணத்தில் வைத்து கொடுக்க வேண்டும்”, அதே போல் தனுஷ் சிங்கத்தின் பால், தானு ஒரு தங்கக் கிண்ணம்.” என்று கூறினார். இறுதியாக பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் நிறுவனங்களுக்கு, நீங்கள் எடுக்கும் படங்களில் வெற்றியடையும் படங்களின் வியாபரத்தின் ஒரு சிறு பகுதியை கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் செலவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த், “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, படம் வெற்றியடைந்துள்ளது. தானு சாருக்கு நன்றி, என்னை மகள் போல் பார்த்துக்கொண்டார். பொதுவாகவே சீக்வல் படங்கள் எடுப்பதில் பெரிய சவால் இருக்கும் அதைத் தாண்டி நான் இயக்கிய படம் வெற்றி அடைந்திருப்பது பெரிய மகிழ்ச்சி. தானு சார் பாக்ஸ் ஆபிஸ் விவரம் பற்றி சொன்னது எனக்கு நான் இயக்கிய படமா என்று ஆச்சரியமாக இருந்தது. வாய்ப்பு கிடைத்தால் வி.ஜ.பி-3 ஆம் பாக்த்தையும் இயக்குவேன். ”

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு அவர்கள், “இந்த நாளிது, இனிய நாளிது. வி.ஐ.பி படம் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் இருந்து அழைத்த நண்பர் டாப் 10 ஹீரோ லிஸ்ட்டில் வி.ஐ.பி-2 படத்தின் மூலமாக தனுஷூம் இடம் பிடித்துள்ளார் என்று கூறினார்.வி.ஐ.பி-2 தமிழ் நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.” என்று அவர் கூறினார். பின் வெளிநாட்டிலும், தமிழ் நாட்டிலும் (மாவட்ட வாரியாக) வி.ஐ.பி படத்தின் வசூல் பற்றிய புள்ளி விவரங்களை கூறினார். இந்தப் படத்தின் வெற்றிக்கு மிகவும் பலமாக இருந்த நடிகர் தனுஷ்,இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விவேக் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]