தனியார் பேருந்துகள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுப்பதற்கு தீர்மானம்

தனியார் பேருந்து சேவை சங்கம் நடத்தவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அகில இலங்கை பேருந்து பயணிகள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.வாகனங்கள் குறித்து அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தண்டப்பண அறவீட்டிற்கு எதிர்ப்பு வெளியிட்டு, தனியார் பேருந்து சேவை சங்கம் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் இப்போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இலங்கை பேருந்து பயணிகள் சங்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ‘வீதியில் பயணிக்கும் பேருந்துகள் போட்டித் தன்மையில் வேகமாகப் பயணிப்பதால் விபத்துக்களும் அதிகரித்துள்ளன.தண்டப்பண அதிகரிப்பினால் பேருந்து சாரதிகள் பாதிக்கப்படுவார்கள் என்று தனியார் பேருந்து சேவை சங்கம் குறிப்பிடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

எந்தவொரு பேருந்து சாரதியும் வீதி ஒழுங்குகளை மீறிச் செயற்படாதிருந்தால் தண்டப் பணம் செலுத்தவேண்டிய அவசியமே ஏற்படாது. அத்துடன் தனியார் பேருந்து சேவை சங்கம் தற்போது முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ள வேலை நிறுத்தத்தின் ஊடாக தவறிழைப்பதற்கான சுதந்திரத்தையே கோருகின்றார்கள் என்றே கருதவேண்டியுள்ளது.

எனவே பேருந்துகளுக்கான தண்டப் பணத்தைக் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுடன், அது தவறிழைப்பதற்கு அனுமதி வழங்குவதாக அமையும் என்பதே எமது கருத்தாகும்.

ஆகவே மனித உயிர்களைப் பாதுகாப்பதற்கு தண்டப் பணம் அறவிடுவதை விடவும், நீண்டகால நோக்கிலானதும் நிரந்தரமானதுமான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்பதுடன், பேருந்து தொடர்பான தண்டப் பணத்தை குறைப்பதற்கான எவ்வித முயற்சிகளும் முன்னெடுக்கப்படக் கூடாது என்று, அகில இலங்கை பேருந்து பயணிகள் சங்கம் வலியுறுத்துகின்றது’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]