தனிநாட்டை அமைப்பதற்கு வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் சதித்திட்டம் – விமல் குற்றச்சாட்டு

தனிநாட்டுக்கான அடித்தளத்தை இடுவதற்காகவே வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் பொலிஸ், காணி அதிகாரங்களைக் கோருகின்றன என்றும், அரசமைப்பில் அதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

கண்டி தபாலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற ‘சல்லாபிக்கும் அரசும் துஷ்பிரயோகிக்கப்படும் இலங்கை மாதாவும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“போரை முடித்த கையோடு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு அபிவிருத்தி பக்கம் விசேட கவனம் செலுத்தியது. அபிவிருத்திச் செயற்பாடுகள் அசுரவேகத்தில் இடம்பெற்றன. இதனால் பல்துறைகளிலும் நாடு வளர்ச்சி கண்டது. ஆனால், ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம்தான் என்ன? தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம், சுகாதாரம் என முக்கிய துறைகள் யாவும் அச்சுறுத்தலையும், சவால்களையும் எதிர்கொண்டுள்ளன.

இந்தியா, நோர்வே மற்றும் தமிழ்ப் பிரிவினைவாதிகளின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் நோக்கிலேயே புதிய அரசமைப்பு தயாரிக்கப்பட்டு வருகின்றது. தற்போதுள்ள அரசமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. புதிய அரசமைப்பின் ஊடாக பௌத்த மதத்துக்குப் பின்னடைவு ஏற்படும் அபாயம் இருக்கின்றது. குறிப்பாக, 1815ஆம் ஆண்டு கலகத்தில்கூட பௌத்த மதம் இந்தளவு கொச்சைப்படுத்தப்படவில்லை.

தனிநாட்டை

அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மட்டுமே பகிரவேண்டியுள்ளது. இவ்விரு அதிகாரங்களையும் வடக்கு, கிழக்கு மாகாணங்களே கோருகின்றன. தனிநாடொன்றை உருவாக்கும் நோக்கிலேயே இவை கேட்கப்படுகின்றது.

ஐ.நா. சாசனத்தின்படி தனிநாடொன்று உதயமாகவேண்டுமானால் அடிப்படையாக இரண்டு காரணிகள் தேவை.
ஒன்று, ஆட்புல எல்லை ஒன்று இருக்கவேண்டும். இரண்டாவது, அங்கே மனித உரிமை மீறல்கள், ஆட்கடத்தல், காணாமல்போதல் போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கவேண்டும். அப்படியானால்தான் தனிநாடொன்றை ஏற்படத்தமுடியும்.

இவை இரண்டையும் மேற்கொள்ள முதலில் ஆட்புல எல்லைக்காக காணி அதிகாரம் வழங்கப்படவுள்ளது. அடுத்ததாக இராணுவச் சிப்பாய்களை குற்றவாளிகளாக்கி மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், மனித கடத்தல் மற்றும் காணாமல்போதல் நிகழ்வுகள் இடம்பெற்றதாகவும் காட்ட முயற்சிக்கின்றனர். அதனூடாக ஏதாவது ஒரு நாடு முன்வந்து ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றி தனிநாட்டைப் பெற்றுக்கொடுக்கும் தந்திரமொன்று அரங்கேற்றப்பட்டு வருகின்றது. இது வடக்கு, கிழக்கு மக்களைத் திருப்திப்படுத்தும் ஒரு விடயமாகும்.

அத்துடன், காணாமல்போனவர்கள் பற்றி ஆராய விசாரணைக்குழு அமைக்கப்படவுள்ளது. அப்படி அமைக்கப்பட்டால் நாட்டுக்காக தியாகம் செய்த பல்வேறு பாதுகாப்புப் படையினரைக் பொய்க்குற்றச்சாட்டில் கைதுசெய்யலாம். எமது தாய்நாட்டைக் காப்பாற்றிய யுத்த சிப்பாய்களுக்கும் புலன் ஆய்வுகளை மேற்கொண்ட இராணுவப் புலனாய்வுத்துறைக்கும் செய்யும் கைமாறு இதுவா? எனக் கேட்க விரும்புகின்றேன்.

பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு தற்போது உருவாகியுள்ள சர்வதேச பயங்கரவாதம் காரணமாக அந்த நாடுகள் மனித உரிமைகளைத் தள்ளிவைத்துவிட்டு தேசிய பாதுகாப்புக்கே முன்னுரிமை அளித்துள்ளனர். ஆனால், நாமோ எமது தேசிய பாதுகாப்பைப் பின்தள்ளிவிட்டு மனித உரிமைகளுக்கே முன்னுரிமை வழங்கி வருகின்றோம்” – என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]